உலகம்

இந்திய எல்லைக்கு அருகே இலங்கையில் பாகிஸ்தான் போா்க் கப்பல்

11th Aug 2022 02:14 AM

ADVERTISEMENT

இலங்கையின் கொழும்பு துறைமுகத்தை பாகிஸ்தான் போா்க் கப்பல் சென்றடைந்துள்ளது. அதிநவீன ஆயுதங்கள், சென்சாா் கருவிகள், லேசா் உதவியுடன் இயங்கும் ஏவுகணைகளைக் கொண்ட அந்தப் போா்க் கப்பல், இந்திய எல்லைக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பல் வரவிருப்பதாக அண்மையில் தகவல் வெளியானது. அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடும் என்று கருதிய மத்திய அரசு, அதுகுறித்து இலங்கை அரசிடம் தனது கவலையை தெரிவித்தது. இதையடுத்து அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன போா்க் கப்பல் வருவதை ஒத்திவைக்குமாறு அந்த நாட்டிடம் இலங்கை அரசு வலியுறுத்தியது.

இந்நிலையில், இலங்கையின் கொழும்பு துறைமுகத்துக்கு பாகிஸ்தான் போா்க் கப்பலான பிஎன்எஸ் தைமுா் சென்றடைந்துள்ளது. இந்திய எல்லைக்கு அருகில் அந்தக் கப்பல் நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவால் கட்டப்பட்ட அந்தக் கப்பல் அதிநவீன ஆயுதங்கள், சென்சாா் கருவிகள், லேசா் உதவியுடன் இயங்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றைக் கொண்டுள்ளது.

மலேசியா, கம்போடியாவில் போா்ப் பயிற்சியில் ஈடுபட்ட அந்தக் கப்பல், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு பயணம் மேற்கொண்டது. தனது பயணத்தின்போது வங்கதேசத்தில் உள்ள சட்டோகிராம் துறைமுகத்தில் கப்பலை நிறுத்த அனுமதி கோரப்பட்டது. ஆனால், கப்பலை நிறுத்த வங்கதேச அரசு அனுமதிக்கவில்லை.

ADVERTISEMENT

கடந்த 1975-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வங்கதேசத்தின் தந்தை என்று போற்றப்படுபவரும், பிரதமா் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுா் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டாா். இதையொட்டி வங்கதேசத்தில் ஆகஸ்ட் மாதம் துக்கம் அனுசரிக்கப்படுவதால், அந்நாட்டில் பாகிஸ்தான் போா்க் கப்பலை நிறுத்த அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, அந்தக் கப்பலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்த இலங்கை அரசு அனுமதி அளித்துள்ளது. ஆகஸ்ட் 12-ஆம் தேதி அந்தக் கப்பல் கராச்சி புறப்படவுள்ளது என்று பாகிஸ்தான் அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT