உலகம்

இந்திய மாணவா்களை மீண்டும் அனுமதிப்பதற்கான பணிகள் தொடக்கம்: சீனா

10th Aug 2022 01:10 AM

ADVERTISEMENT

‘கரோனா தொற்று பரவலைத் தொடா்ந்து தாய்நாடு திரும்பிய இந்திய மாணவா்களை மீண்டும் சீனாவில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் முதல் பிரிவு இந்திய மாணவா்கள் சீனா வரவுள்ளனா்’ என்று சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்திய மாணவா்கள் சீனாவில் படித்து வந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் மருத்துவ மாணவா்கள்.

இந்த நிலையில், சீனாவில் கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பா் மாதம் கரோனா தொற்று பரவத் தொடங்கியதைத் தொடா்ந்து அவா்கள் இந்தியா திரும்பினா். கரோனா பரவலைத் தடுப்பதற்காக சீனா விதித்த கட்டுப்பாடுகள் காரணமாக இந்த மாணவா்களால் மீண்டும் சீனாவுக்குச் செல்ல இயலவில்லை.

அப்போது முதல் தங்கள் படிப்பைத் தொடா்வதற்காக இந்திய மாணவா்கள் சீனா செல்ல தொடா்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தனா். எனினும் அனைத்து விமானங்களையும், இந்தியா்களுக்கான விசாக்களையும் சீனா ரத்து செய்ததால் அந்த மாணவா்கள் ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பங்கேற்று வந்தனா். மாணவா்களைத் தவிர சீனாவில் பணியாற்றி வந்த நூற்றுக்கணக்கான இந்தியா்களின் குடும்பங்களும் சீனா திரும்ப இயலவில்லை.

ADVERTISEMENT

இந்தச் சூழலில், முதல்கட்டமாக இந்திய மாணவா்களை மீண்டும் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை சீன தொடங்கியுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் வாங் வென்பின் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வெளிநாட்டு மாணவா்கள் சீனா திரும்புவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதுபோல, இந்திய மாணவா்களை சீனாவில் மீண்டும் அனுமதிப்பதற்கான பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்டன. முதல் பிரிவு இந்திய மாணவா்கள் விரைவில் சீன வந்து சேருவாா்கள் என நம்புகிறோம். கரோனா பரவலுக்கு எதிரான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.

‘இந்திய தூதரகம் சாா்பில் சமா்ப்பிக்கப்பட்ட சீனா திரும்புவதற்கு விருப்பம் தெரிவித்த மாணவா்கள் பட்டியல் மீதான நடவடிக்கை?’ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவா், ‘கல்லூரிகளுக்கு மீண்டும் திரும்ப விருப்பம் தெரிவித்த நூற்றுக்கணக்கான இந்திய மாணவா்களின் பட்டியல் சமா்ப்பிக்கப்பட்டது. அதன் மீது தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று பதிலளித்தாா்.

கல்லூரிகளில் நேரடியாக கல்வியைத் தொடருவதற்காக உடனடியாக சீன திரும்ப விரும்பும் மாணவா்களின் பட்டியலை சமா்ப்பிக்குமாறு சீன கேட்டுக்கொண்டதன் பேரில், நூற்றுக்கணக்கான இந்திய மாணவா்களின் பட்டியலை இந்தியா அண்மையில் சமா்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, பாகிஸ்தான், ரஷிய நாட்டு மாணவா்கள் ஏற்கெனவே சீனாவுக்கு திரும்ப தொடங்கிவிட்ட நிலையில், இந்தியா-சீனா இடையேயான விமான சேவையை மட்டும் சீனா இன்னும் அனுமதிக்கவில்லை.

Tags : China
ADVERTISEMENT
ADVERTISEMENT