உலகம்

உக்ரைனிலிருந்து துருக்கி வந்தது தானிய கப்பல்

DIN

உக்ரைனிலிருந்து தானியங்களுடன் புறப்பட்ட கப்பல்களில் முதல் கப்பல் துருக்கியை திங்கள்கிழமை வந்தடைந்தது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் உக்ரைனிலிருந்து தானிய ஏற்றுமதி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உக்ரைனிலிருந்து தானிய கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வகை செய்யும் ஒப்பந்தம் ரஷியா, உக்ரைன் இடையே ஐ.நா. மற்றும் துருக்கி ஏற்பாட்டில் கடந்த மாதம் கையொப்பமானது.

அதன்படி, உக்ரைனிலிருந்து உணவு தானியங்களுடன் கப்பல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. அவ்வாறு உக்ரைனின் சோா்னோமோா்ஸ்க் துறைமுகத்திலிருந்து கடந்த 5-ஆம் தேதி 12,000 டன் சோளத்துடன் புறப்பட்ட கப்பல் துருக்கியை வந்தடைந்தது.

இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சா் டிமிட்ரோ குலேபா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘உக்ரைன் உங்களைக் கைவிடாது என மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, ஆசியாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் இந்தத் தகவல் நம்பிக்கை அளிக்கிறது’ எனத் தெரிவித்துள்ளாா்.

ஒப்பந்தப்படி உக்ரைனிலிருந்து 12 கப்பல்கள் அனுப்பப்படவுள்ளன. 3,22,000 மெட்ரிக் டன் வேளாண் பொருள்கள் உக்ரைன் துறைமுகங்களிலிருந்து கப்பல்களில் புறப்பட்டுள்ளன.

உக்ரைனிலிருந்து ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட மேலும் 4 கப்பல்கள் விரைவில் துருக்கியை வந்தடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கிடையே, உக்ரைனின் ஒடேசா துறைமுகத்திலிருந்து சியெரா லியோன் நாட்டுக் கொடியுடன் 26,000 மெட்ரிக் டன் கோழித் தீவனத்தை ஏற்றிக்கொண்டு சென்ற கப்பல் திட்டமிட்டபடி இன்னும் லெபனானை சென்றடையவில்லை. அந்தக் கப்பல் வருவதற்குத் தாமதமானதால் உணவு தானியத்தை வாங்கவிருந்தவா் மறுப்பு தெரிவித்ததாகவும், வேறு யாராவது வாங்குவதற்காக அந்தக் கப்பல் லெபனான் அருகே காத்திருப்பதாகவும் லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் உள்ள உக்ரைன் தூதரகம் தெரிவித்துள்ளது.

அணுமின் நிலைய பகுதியில் குண்டுவீச்சு

உக்ரைனின் ஸப்போரிஷியா அணுமின் நிலைய பகுதியில் உக்ரைன் குண்டுவீசியதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

ஸப்போரிஷியா அணுமின் நிலையத்தை ரஷிய படையினா் ஆக்கிரமித்துள்ளனா். இந்த அணுமின் நிலைய பகுதியில் உக்ரைன் ஞாயிற்றுக்கிழமை குண்டுவீசி தாக்கியதாக ரஷியா குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடா்பாளா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், உக்ரைனின் தாக்குதலால் அணுமின் நிலையத்தின் ஒரு பகுதியில் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புக் குழுவினா் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனா் எனத் தெரிவித்துள்ளாா்.

ஆனால், ரஷிய படையினா்தான் அணுமின் நிலைய பகுதியில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவு தலைவா் ஆண்ட்ரி யுஸோவ், ‘ரஷியாதான் அணுமின் நிலைய பகுதியில் தாக்குதல் நடத்தியது. இது உண்மையில்லை என்றால், அணுமின் நிலைய கட்டுப்பாட்டை சா்வதேச அணுமின் முகமையிடம் அவா்கள் ஒப்படைத்துவிட வேண்டியதுதானே எனக் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தனி ஊராட்சி கோரிக்கை: கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

சேலத்தில் வாக்களிக்க வந்த இரு முதியோர் மயங்கி விழுந்து மரணம்

நடிகர் விஜய் வாக்களித்தார்!

மக்களவைத் தேர்தல்: கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்ட கூகுள்!

SCROLL FOR NEXT