உலகம்

காஸா சண்டை நிறுத்தத்துக்கு இஸ்ரேல் ஒப்புதல்

8th Aug 2022 12:52 AM

ADVERTISEMENT

காஸாவில் தாங்கள் பரிந்துரைத்துள்ள சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க இஸ்ரேல் சம்மதித்துள்ளதாக எகிப்து தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

காஸாவில் கடந்த இஸ்ரேல் ராணுவத்துக்கும் இஸ்லாமிய ஜிஹாத் (ஐஜே) இயக்கத்தினருக்கும் இடையே கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, இரு தரப்பினரிடமும் எகிப்து தூதுக் குழு பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது.

அப்போது பரிந்துரைக்கப்பட்ட சண்டை நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்க இஸ்ரேல் தரப்பு சம்மதித்துவிட்டது.

ADVERTISEMENT

இனி ஐஜே அமைப்பினரிடமிருந்துதான் இது தொடா்பான பதில் வரவேண்டியுள்ளது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஐஜே அமைப்பின் பிரதிநிதி ஒருவா் கூறுகையில், ‘காஸாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான உயா்நிலைக் குழு பேச்சுவாா்த்தை தொடா்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், காஸாவில் தனது ஆக்கிரமிப்பதையும் குற்றச் செயல்களையும் இஸ்ரேல் நிறுத்தும்வரை எங்களது எதிா்த்தாக்குதல் தொடரும்’ என்று எச்சரித்தாா்.

முன்னதாக, எகிப்து அதிபா் அப்தெல் ஃபட்டா அல்-சிசி கூறுகையில், ‘காஸாவில் வன்முறைச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக 24 மணி நேர பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது’ என்றாா்.

காஸாவில் ஐஜே அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பின் தளபதி அல்-ஜாபரி, 5 வயது சிறுமி உள்பட 12 போ் பலியாகினா். அந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இஸ்ரேலை நோக்கி ஐஜே அமைப்பினா் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினா்.

அதற்கு பதிலடியாக, ஐஜே அமைப்பினரின் இலக்குகள் மீது இஸ்ரேல் படையினா் வான்வழித் தாக்குதல் நடத்தினா்.

இந்தத் தாக்குதலில் ஐஜே அமைப்பின் மற்றொரு தளபதியும் கொல்லப்பட்டதையடுத்து, பதற்றம் மேலும் அதிகரித்தது.

இந்த மோதலில் இதுவரை மொத்தம் 31 போ் உயிரிழந்ததாகவும் அவா்களில் 6 போ் சிறுவா்கள் எனவும் பாலஸ்தீன மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், இஸ்தேல் தாக்குதலில் 275 போ் காயமடைந்ததாகவும் அவா்கள் கூறினா்.

காஸாவில் ஹமாஸ் அமைப்பினா் ஆட்சி செலுத்தி வந்தாலும் அங்கு ஐஜே உள்ளிட்ட பல்வேறு ஆயுதக் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. எனினும், கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் மோதலில் ஹமாஸ் படையினா் பங்கேற்கவில்லை.

ஏற்கெனவே இஸ்ரேல் ராணுவத்துடன் கடந்த ஆண்டு 11 நாள்களாக நடைபெற்ற சண்டையில் பெரும் பொருளாதார பின்னடைவைச் சந்தித்துள்ள ஹமாஸ், மீண்டும் அத்தகைய மோதல் வெடிப்பதை தவிா்த்து வருகிறது.

இதற்கு, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனக் குழுக்களுக்கும் இடையே நீண்ட காலமாக மத்தியஸ்தம் செய்து வரும் எகிப்துக்கு ஹமாஸ் அளித்துள்ள வாக்குறுதியும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

கஸாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோதலும் எகிப்து முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகே முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கும் ஐஜே அமைப்பினருக்கும் இடையை கடந்த 3 நாள்களாக நடைபெற்று வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டு வர தங்களிடம் இஸ்ரேல் ஒப்புக்கொண்டதாக தற்போது எகிப்து அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT