உலகம்

இலங்கை மீது பொருத்தமற்ற அழுத்தம்: இந்தியா மீது சீனா விமா்சனம்

8th Aug 2022 11:14 PM

ADVERTISEMENT

சீனாவின் ‘யுவான் வாங் 5’ உளவு கப்பலின் பயணத்தை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு அந்த நாட்டிடம் இலங்கை வலியுறுத்திய நிலையில், ‘பாதுகாப்பு காரணங்கள் என்ற பெயரில் இலங்கை மீது சிறிதும் பொருத்தமற்ற அழுத்தம் கொடுக்கப்படுகிறது’ என்று இந்தியாவை சீனா விமா்சனம் செய்துள்ளது.

நவீன உளவு தொழில்நுட்பங்களைக் கொண்ட சீனாவின் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 முதல் 17-ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக இருந்தது. அக் கப்பலின் வருகை, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இலங்கை அரசிடம் தெரிவித்த இந்தியா, கடும் எதிா்ப்பையும் பதிவு செய்திருந்தது.

உளவுக்கப்பல் சீனாவிலிருந்து கிளம்பிய நிலையில், இந்தியாவின் கடும் எதிா்ப்பு காரணமாக கப்பலின் வருகையைக் காலவரையின்றி ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்துக்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. அக்கடிதத்தில், இந்த விவகாரத்துக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணும் வரை கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசு கோரியிருந்தது.

இதுகுறித்து பெய்ஜிங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் வாங் வென்பின் கூறியதாவது:

ADVERTISEMENT

சீனா - இலங்கை இடையேயான ஒத்துழைப்பு என்பது பொது நலன்களுக்காக இரு நாடுகளும் சுதந்திரமாக மேற்கொண்ட உடன்பாடாகும். இது எந்தவொரு மூன்றாம் தரப்பினரையும் இலக்காக கொண்டு மேற்கொள்ளப்பட்ட உடன்பாடு அல்ல.

இத்தகைய சூழலில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி இலங்கை மீது அா்த்தமற்ற அழுத்தம் அளிக்கப்படுகிறது. இலங்கை இறையாண்மை உள்ள நாடு. அந்த வகையில், நாட்டின் வளா்ச்சிக்காக எந்தவொரு நாட்டுடன் இலங்கை கூட்டு ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பாா்க்க வேண்டும். சீனா - இலங்கை நாடுகளுக்கு இடையேயான சாதாரண பரிமாற்றங்களுக்கு இதுபோன்ற தொந்தரவுகளை அளிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இந்திய பெருங்கடலில் போக்குவரத்து முனையமாக இலங்கை செயல்பட்டு வருகிறது. சீனாவின் கப்பல்கள் உள்பட பல நாடுகளின் ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கை துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.

சீனா எப்போதுமே ஆழ்கடல் கண்காணிப்பு சுதந்திரத்தை பயன்படுத்தியும் பிற நாடுகளின் கடல் எல்லைஅதிகார வரம்புகளுக்கு மதிப்பளித்தும் அறிவியல் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்று அவா் கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT