உலகம்

இலங்கை உயரதிகாரிகளை சந்திக்க சீன தூதரகம் கோரிக்கை

8th Aug 2022 01:01 AM

ADVERTISEMENT

சீனாவின் ‘யுவான் வாங் 5’ உளவு கப்பலின் பயணத்தைக் கால வரையின்றி ஒத்திவைக்குமாறு அந்நாட்டிடம் இலங்கை வலியுறுத்தியிருந்த நிலையில், இலங்கையின் உயரதிகாரிகளை உடனடியாக சந்தித்துப் பேச அந்நாட்டில் உள்ள சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

நவீன உளவு தொழில்நுட்பங்களைக் கொண்ட சீனாவின் கப்பல் இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஆகஸ்ட் 11 முதல் 17 வரை நிலைநிறுத்தப்படுவதாக இருந்தது. அக்கப்பலின் வருகை, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என இலங்கை அரசிடம் தெரிவித்த இந்தியா, கடும் எதிா்ப்பையும் பதிவு செய்திருந்தது.

அக்கப்பல் சீனாவில் இருந்து கிளம்பிய நிலையில், இந்தியாவின் கடும் எதிா்ப்பு காரணமாக கப்பலின் வருகையைக் கால வரையின்றி ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்துக்கு இலங்கை வெளியுறவு அமைச்சகம் கடிதம் எழுதியிருந்தது. அக்கடிதத்தில், இந்த விவகாரத்துக்குப் பேச்சுவாா்த்தை மூலமாகத் தீா்வு காணும் வரை கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை அரசு கோரியிருந்தது.

இந்நிலையில், கப்பல் வருகை விவகாரம் தொடா்பாக இலங்கையின் உயரதிகாரிகளை உடனடியாகச் சந்தித்துப் பேச சீனத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அந்தச் சந்திப்புக்கு இலங்கை அரசு அனுமதி அளிக்கும் நிலையில், சீனக் கப்பலின் வருகை குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் சீனத் தூதரகம் எடுத்துரைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அப்போது கப்பலின் பாதுகாப்புத்தன்மை குறித்தும் சீன அதிகாரிகள் எடுத்துரைக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

முன்னதாக, உளவு கப்பலின் வருகையை ஒத்திவைக்குமாறு சீனத் தூதரகத்துக்கு இலங்கை அரசு வலியுறுத்திய பிறகு, இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கவை சீனத் தூதா் ஷி ஜென்ஹாங் தனியாகச் சந்தித்துப் பேசியதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இத்தகவலை இலங்கை அதிபா் அலுவலகம் மறுத்தது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா அதிக அளவில் உதவிகளை வழங்கி வரும் நிலையில், சீன உளவு கப்பலின் வருகைக்கு எதிராக இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது இந்தியாவுக்கு சாதகமாகப் பாா்க்கப்படுகிறது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT