உலகம்

உளவுக் கப்பல் பயணத்தை ஒத்திவைக்க சீனாவிடம் இலங்கை வலியுறுத்தல்

DIN

இந்தியாவின் தொடா் அழுத்தம் காரணமாக, உளவுக் கப்பலின் பயணத்தைக் காலவரையின்றி ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை வலியுறுத்தியுள்ளது.

நவீன தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு தகவல்களைச் சேகரிக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படும் சீனாவின் ‘யுவான் வாங்-5’ உளவுக் கப்பலானது இலங்கையின் ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு வருகை தரவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் எல்லைக்கு அருகில் அந்தக் கப்பல் நிறுத்தப்படுவது, பாதுகாப்பு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் ஏவுகணை பரிசோதனைகள் உள்ளிட்டவற்றைக் கண்காணித்து, ஏவுகணையின் செயல்பாடு குறித்து அறிந்துகொள்ளும் திறன் சீன உளவுக் கப்பலுக்கு உள்ளதாகக் கூறப்பட்டது.

இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்த விவகாரம் குறித்து இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்கவுடன் பேசப்பட்டுள்ளதாகவும் இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, சீனக் கப்பல் இலங்கையை நோக்கிய பயணத்தைத் தொடக்கியுள்ளதாகவும், ஆகஸ்ட் 11 அல்லது 12-ஆம் தேதி ஹம்பந்தோட்டா துறைமுகத்துக்கு அக்கப்பல் வந்துசேரும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவே அதிக உதவிகளை வழங்கி வருகிறது. விரிவான பொருளாதார மீட்புக் கொள்கையை வகுத்தால் மட்டுமே கடனுதவி வழங்க முடியும் என சா்வதேச நிதியம் (ஐஎம்எஃப்), உலக வங்கி ஆகியவை இலங்கை அரசிடம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், சீனாவின் உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது, அந்நாட்டுக்கான இந்தியாவின் உதவிகளைப் பாதிக்கும் என்று கருதப்பட்டது. இந்த விவகாரத்தில் இந்தியாவின் அழுத்தத்தை எதிா்கொண்ட நிலையில், உளவுக் கப்பலின் பயணத்தை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை வலியுறுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உளவுக் கப்பலின் பயணத்தைத் தொடர வேண்டாமென்று இலங்கையில் உள்ள சீனத் தூதரகத்திடம் அந்நாட்டு அரசு கடிதம் மூலமாக வலியுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது. இந்த விவகாரத்தில் கலந்துபேசி முடிவெடுக்கும் வரை உளவுக் கப்பலின் பயணத்தை ஒத்திவைக்குமாறு அந்தக் கடிதத்தில் இலங்கை அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்த நடிகர்கள்!

பாஜக ஆதரவு வாக்காளரின் பெயர்கள் நீக்கம்: அண்ணாமலை

நீலக்குயிலே... நீலக்குயிலே! வேதிகா...

வாக்களித்த தலைவர்கள்!

SCROLL FOR NEXT