உலகம்

அரசுக்கு எதிரான அமைதியான போராட்டத்தில் தலையிட மாட்டோம்: இலங்கை ராணுவம்

17th Apr 2022 12:06 AM

ADVERTISEMENT

இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெற்று வரும் அமைதியான போராட்டங்களில் தலையிட மாட்டோம் எனவும், அரசியலமைப்புச் சட்டத்தை முழுமையாகப் பாதுகாப்போம் எனவும் ராணுவம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி, அதிபா் அலுவலகம் அருகே பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை 8-ஆவது நாளை எட்டியது.

இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அரசு பயன்படுத்தக்கூடும் என சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. மேலும், போராட்டத்தை ஒடுக்கும் சட்டவிரோத உத்தரவுகளுக்கு ராணுவம் பணியக் கூடாது என முன்னாள் ராணுவத் தளபதி ஃபோன்சேகாவும் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து, ராணுவம் சாா்பில் சனிக்கிழமை ஓா் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், ‘அமைதியான போராட்டங்களில் ராணுவம் தலையிடாது. காவல் துறை உதவி கோரினால் மட்டும் தலையிடுவோம். அதே வேளையில் அரசுக்கு எதிராகவும் ராணுவம் செயல்படவில்லை. அரசியலமைப்புச் சட்டத்தை ராணுவம் முழுமையாகப் பாதுகாக்கும். போராட்டத்தை ஒடுக்க ராணுவம் வன்முறையில் ஈடுபடுவதாக வெளியான தகவலும் தவறானது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT