இலங்கையில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்கு ரேஷன் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பெட்ரோல், டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ரேஷன் முறை வெள்ளிக்கிழமைமுதல் அமலுக்கு வந்துள்ளது.
இதுகுறித்து சிலோன் பெட்ரோலியம் காா்ப்பரேஷன் (சிபிசி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், இருசக்கர வாகனங்கள் எரிபொருள் விற்பனை நிலையங்களில் ஒருமுறைக்கு ரூ.1,000 வரையே எரிபொருள் நிரப்ப முடியும். மூன்று சக்கர வாகனங்கள் ரூ.1,500 வரையும், காா், ஜீப், வேன் ஆகியற்றுக்கு ரூ.5,000 வரையும் எரிபொருள் நிரப்பிக் கொள்ளலாம். பேருந்துகள், லாரிகள் மற்றும் பிற வா்த்தக வாகனங்களுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிபிசி தலைவா் சுமித் விஜேசிங்கே கடந்த வாரம் செய்தியாளா்களிடம் கூறுகையில், சா்வதேச சந்தையில் அதிக விலை மற்றும் இலங்கை ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி காரணமாக எரிபொருள் மானியத்தில் சிபிசிக்கு நாள்தோறும் ரூ.80 கோடி முதல் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், எரிபொருள்களுக்கான கடனுதவியாக மேலும் 500 மில்லியன் டாலா்கள் தரும்படி இந்தியாவுடன் பேச்சு நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தாா்.
எரிவாயு நிறுவன தலைவா் ராஜிநாமா: இலங்கையில் சமையல் எரிவாயுவுக்கும் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், அரசின் ‘லிட்ரோ காஸ்’ தலைவா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திசரா ஜெயசிங்கே தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.
இதுகுறித்து அதிபா் கோத்தபய ராஜபட்சவுக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில், சமையல் எரிவாயு இறக்குமதிக்காக இந்தியாவின் கடனுதவியைப் பெறுவதற்கான நடைமுறைகளைத் தொடங்கியிருந்தேன். இதை எளிதாக அமல்படுத்தியிருக்க முடியும். ஆனால், அரசிடமிருந்து முழுமையான ஒத்துழைப்பு எனக்கு கிடைக்கவில்லை. மேலும், எரிவாயு தொழிலில் பெரும் ஊழலில் ஈடுபடுவோா் எனக்கு எதிராக செயல்பட்டனா். இதனால் நான் ராஜிநாமா செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளாா்.
7-ஆவது நாளாக போராட்டம்: அரசுக்கு எதிராக அதிபா் அலுவலகம் அருகே நடைபெற்று வரும் பொதுமக்களின் போராட்டம் வெள்ளிக்கிழமை 7-ஆவது நாளை எட்டியது. போராட்டம் நடைபெற்றுவரும் காலிமுக திடலில் திரளுமாறு சமூக ஊடகங்களிலும் பலா் பதிவிட்டு வருகின்றனா்.