பாகிஸ்தான் நாடாளுமன்ற துணைத் தலைவர் பொறுப்பை காசிம் சுரி நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு ராஜிநாமா செய்துள்ளார்.
தனது ராஜிநாமா கடிதத்தை காசிம் சுரி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். "பாகிஸ்தான் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டில் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். நாட்டு நலன்கள் மற்றும் சுதந்திரத்துக்காக நாங்கள் போராடுவோம். பாகிஸ்தானைப் பாதுகாக்க எந்தவொரு எல்லைக்கும் நாங்கள் செல்வோம்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பாக். நாடாளுமன்ற புதிய பேரவைத் தலைவர் ராஜா பர்வேஸ் அஷ்ரப்
பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏப்ரல் 3-ம் தேதி தள்ளுபடி செய்தது, நாடாளுமன்ற பேரவைத் தலைவர் தேர்தல் நடத்துவதற்காக ஏப்ரல் 16 முதல் ஏப்ரல் 22 வரை நடைபெறவிருந்த கூட்டத்தொடரை ரத்து செய்தது போன்ற முடிவுகளால் காசிம் சுரி மீது விமர்சனங்கள் எழுந்தன. அவர் தற்போது பேரவைத் தலைவராக (பொறுப்பு) செயல்பட்டு வருகிறார்.
இதையடுத்து, ஏப்ரல் 9-ம் தேதி காசிம் சுரிக்கு எதிராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த முர்தாஸா ஜாவெத் அபாஸி நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில், காசிம் சுரிக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்குவதற்கு முன்பு பேரவை துணைத் தலைவர் பொறுப்பை அவர் ராஜிநாமா செய்துள்ளார்.
இதனிடையே, பாகிஸ்தான் நாடாளுமன்ற பேரவைத் தலைவர் பொறுப்பு வேறு எவரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த ராஜா பர்வேஸ் அஷ்ரப் பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ளார்.