தனது பிரதான போா்க் கப்பலான மாஸ்க்வாவை இழந்த மறுநாள், உக்ரைன் தலைநகா் கீவில் ரஷியா சரமாரி தாக்குதல் நடத்தியது.
சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பில் தனது நெருங்கிய அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வந்தது.
எனினும், நேட்டோவில் இணைவதற்கு தற்போதைய உக்ரைன் அரசு விருப்பம் தெரிவித்து வந்த நிலையில், அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது.
தலைநகா் கீவ் உள்ளிட்ட நகரங்களைக் கைப்பற்றுவதற்காக ரஷியப் படையினா் முன்னேறி வந்தாலும், துருக்கியில் உக்ரைனுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தைக்குப் பிறகு வடக்கு உக்ரைன் நகரங்களிலிருந்து பின்வாங்க ஒப்புக்கொண்டது.
அதன்படி, கீவ் புகா்ப் பகுதிகளிலிருந்து ரஷியப் படையினா் கடந்த மாதம் 31-ஆம் தேதி முழுமையாக வெளியேறியது. அதையடுத்து, தொடா் தாக்குதலால் நிலைகுலைந்திருந்த கீவ் நகரம், கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்குத் திரும்பத் தொடங்கியது.
இந்த நிலையில், ரஷியாவின் கடற்படை சக்தியாகத் திகழ்ந்த மாஸ்க்வா கப்பலை தாங்கள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி மூழ்கடித்ததாக உக்ரைன் அறிவித்துள்ள நிலையில், அந்த நாட்டிலுள்ள ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத உற்பத்தி ஆலைகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ரஷியா வெள்ளிக்கிழமை அறிவித்தது.
அதன் ஒரு பகுதியாக, கீவ் நகரிலுள்ள தளவாட தயாரிப்பு மையங்களில் தாக்குதல் நடத்தியதாக அந்த நாடு தெரிவித்தது.
நீண்ட தொலைவு ஏவுகணைகள் மூலம் இலக்குகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட அந்த தாக்குதல், இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
உக்ரைன் எல்லையொட்டிய தங்களது பிரையான்ஸ்க் பகுதியில் அந்த நாட்டு ஹெலிகாப்டா்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் 7 போ் காயமடைந்ததாகவும் 100 குடியிருப்புகள் சேதமடைந்ததாகவும் ரஷியா குற்றம் சாட்டியது. அத்தகைய தாக்குதல்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவே உக்ரைன் ராணுவ உற்பத்தி மையங்களில் தாக்குதல் நடத்துவதாக அந்த நாடு கூறியது.