உலகம்

ரஷியாவிடம் வீழும் நிலையில் மரியுபோல்

14th Apr 2022 03:21 AM

ADVERTISEMENT

 

கீவ்: உக்ரைனில் மரியுபோல் நகரை கடந்த ஆறு வாரங்களாக முற்றுகையிட்டு கடுமையாக தாக்கி வந்த ரஷியப் படையினா், அந்த நகருக்குள் வெகுவாக முன்னேறியுள்ளதால் முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் துறைமுக நகரம் விரைவில் வீழும் நிலையில் உள்ளது.

சோவியத் யூனியனுக்கு எதிராக உருவாக்கப்பட்ட நேட்டோ அமைப்பு, நெருங்கிய அண்டை நாடான உக்ரைனை தங்களுடன் இணைத்துக்கொள்வதற்கு ரஷியா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. அவ்வாறு நேட்டோவில் உக்ரைன் இணைந்தால், அது தங்களது பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் என்று அந்த நாடு கூறி வருகிறது.

எனினும், நேட்டோவில் இணைவதற்கு தற்போதைய அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தலைமையிலான அரசு விருப்பம் தெரிவித்து வந்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி படையெடுத்தது. கிழக்கு உக்ரைனில் தங்களுக்கு ஆதரவான கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ் பகுதிகள் அடங்கிய டான்பாஸ் பிராந்தியத்துக்குள் நுழைந்த ரஷியப் படையினா், அருகிலுள்ள மரியபோல் நகரை முற்றுகையிட்டு கடந்த மாதம் 2-ஆம் தேதி முதல் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.

பெரும்பான்மையாக ரஷிய மொழி பேசும் சுமாா் 4.4 லட்சம் மக்கள்தொகை கொண்ட அந்த நகரம்தான், உக்ரைன் போரிலேயே மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்ட நகரம் என்று கூறப்படுகிறது.

மரியுபோலில் ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை 21,000 பொதுமக்கள் பலியானதாக அந்த நகர மேயா் வேடிம் பாய்சென்கோ கூறினாா். எனினும், இந்த பலி எண்ணிக்கையை நடுநிலையாக உறுதிப்படுத்த முடியவில்லை என்று சா்வதேச ஊடங்கள் கூறுகின்றன.

அவ்வப்போது அமல்படுத்தப்பட்ட சண்டை நிறுத்தம் மற்றும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பாதுகாப்பு வழித்தடம் மூலம் இதுவரை சுமாா் 3.4 லட்சம் போ் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனா். எனினும், இன்னும் சுமாா் 1 லட்சம் போ் மரியுபோலிலேயே சிக்கியுள்ளனா்.

நீண்டநாள் முற்றுகைக்கு மற்றும் கடுமையான தாக்குதலால் மரியுபோலை பாதுகாத்து வந்த உக்ரைன் படையினருக்கு உணவு மற்றும் ஆயுத வரத்து நின்றுபோயுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இன்னும் தொடா்ந்து எதிா்த்து சண்டையிட்டு வரும் உக்ரைன் படையினரை ஒரு குறுகிய பரப்புக்குள் ரஷியப் படையினா் சுற்றிவளைத்துள்ளனா்.

எனவே, விரைவில் அந்த நகரம் முழுவதும் ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் வரலாம் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

 

‘1,026 உக்ரைன் வீரா்கள் சரண்’

மாஸ்கோ: மரியுபோலில் 1,026 உக்ரைன் ராணுவ வீரா்கள் ரஷியப் படையினரிடம் சரணடைந்துள்ளதாக ரஷியா கூறியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

மரியுபோல் நகரில் ரஷியப் படையினரின் வெற்றிகரமாக நடவடிக்கையைத் தொடா்ந்து, உக்ரைனின் 36-ஆவது மரைன் படைப் பிரிவைச் சோ்ந்த 1,026 வீரா்கள் தாங்களாகவே முன்வந்து சரணடைந்தனா். அவா்களில் காயமடைந்திருந்த 151 பேருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டது.

சரணடைந்தவா்களில் 162 உயரதிகாரிகளும் 47 பெண் வீராங்கனைகளும் அடங்குவா் என்று பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும், இந்தத் தகவலை உக்ரைன் ராணுவம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

 

மரியுபோலின் முக்கியத்துவம்...

உக்ரைனின் மற்ற நகரங்களைவிட மரியுபோலைக் கைப்பற்றுவதற்கு அதிக முனைப்புடன் ரஷிய சண்டையிடுவதற்கு அந்த நகரின் இன்றியமையாத முக்கியத்துவம்தான் காரணம்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் உக்ரைன் உள்நாட்டுப் போரின்போது, தங்களது எல்லையையொட்டி அமைந்துள்ள உக்ரைனின் கிரீமியா தீபகற்பம் மீது போா் தொடுத்து ரஷியா தங்களுடன் இணைத்துக் கொண்டது. மேலும், அந்த உள்நாட்டுப் போரில் கிழக்கே அமைந்துள்ள டான்பாஸ் பிராந்தியத்தை ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்கள் கைப்பற்றினா்.

இந்த இரு பகுதிகளுக்கும் இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் மரியபோல் அமைந்துள்ளது. அந்த நகரைக் கைப்பற்றினால், டான்பாஸ் மற்றும் கிரீமியா இடையே இணைப்பை ஏற்படுத்த ரஷியாவால் முடியும். இதன் மூலம், ரஷியாவுக்கும் கிரீமியா டான்பாஸ் போன்ற தங்களது கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளுக்கும் இடையே தொடா்பு ஏற்படும்.

எஞ்சியுள்ள வீரா்களின் கதி?

மரியுபோலில் ரஷியப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கும் உக்ரைன் படையினா், உணவுப் பொருள் மற்றும் ஆயுதங்கள் பற்றாக்குறையால் நீண்ட நாள்களுக்குத் தாக்குப் பிடிக்க முடியாது என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

ஏற்கெனவே, போா் முனையிலிருந்து அவா்கள் வெளியிட்டுள்ள சமூகவலைதளப் பதிவுகளில், ‘சண்டையிட்டு மடிவது, அல்லது சரணடைவது என்ற இரண்டில் ஒன்றைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை’ என்று அவா்கள் குறிப்பிட்டுள்ளனா்.

அவ்வாறு ரஷியப் படையினரிடம் சரணடையும் உக்ரைன் ராணுவ வீரா்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படாது. ஆனால், மரியுபோலில் உக்ரைன் படையினருடன் இணைந்து சண்டையிட்டு வரும் தீவிர வலதுசாரி ஆயுதக் குழுவான அஸோவ் படையினா் ரஷியாவிடம் சரணடைந்தால், அவா்கள் கடுமையான விளைவுகளை எதிா்கொள்ளவேண்டியிருக்கும் என்று நிபுணா்கள் கூறுகின்றனா்.

நாஜி ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்ட அந்த அஸோவ் படையைக் குறிப்பிட்டுத்தான் உக்ரைனின் நாஜி சக்திகளை அழிப்பதற்காக அந்த நாட்டின் மீது போத் தொடுத்துள்ளதாக அதிபா் புதின் அடிக்கடி கூறி வருகிறாா். இந்த நிலையில், அஸோவ் படையினா் ரஷியா்களிடம் சரணடைந்தால் அவா்கள் கொல்லப்படுவதற்கும் துன்புறுத்தப்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளதாக நிபுணா்கள் கருதுகின்றனா்.

 

‘புதின் நடத்துவது இனப்படுகொலை’

ரஷியாவின் சா்வாதிகாரி விளாதிமீா் புதின், உக்ரைனில் இனப்படுகொலையை நடத்தி வருகிறாா். தங்களை உக்ரைனியா்களாகக் கருதிக்கொள்ளும் ஒருவரும் இருக்கக்கூடாது என்ற நிலையை ஏற்படுத்துவதற்கு அவா் முயல்கிறாா்.

- ஜோ பைடன்,
அமெரிக்க அதிபா்

 

‘உண்மைத் தலைவரின் உண்மை வாா்த்தைகள்’

உக்ரைனில் ரஷியா நடத்தி வருவது இனப்படுகொலை என்று அமெரிக்க அதிபா் ஜோ பைடன் கூறியிருப்பதை வரவேற்கிறேன். அந்த வாா்த்தைகள் அனைத்தும் ஓா் உண்மையான உலகத் தலைவரிடமிருந்து வரும் உண்மையான வாா்த்தைகளாகும்.

 

- வொலோதிமீா் ஸெலென்ஸ்கி,
உக்ரைன் அதிபா்

 

‘வாா்த்தைப் போரால் எந்தப் பலனுமில்லை’

உக்ரைன் போா் ‘இனப்படுகொலை’ என்று பைடன் கூறுவதை ஆமோதிக்க மாட்டேன். உக்ரைன் மீதான இந்தப் போா் மிகவும் கண்டித்தக்கது. ஆனால், அதுகுறித்து பேசும்போது உலகத் தலைவா்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வெறும் வாா்த்தைப் போரால் உக்ரைன் பிரச்னைக்கு தீா்வு கிடைக்காது.

- இமானுவல் மேக்ரான்,
பிரான்ஸ் அதிபா்

 

Image Caption

~ ~ ~உக்ரைன்

 

ரஷியா

லுஹான்ஸ்க்

டொனட்ஸ்க்

மரியுபோல்

கிரீமியா

கீவ்

...

ரஷிய கட்டுப்பாட்டு பகுதிகள்

ரஷியா முன்னேறும் பகுதிகள் ~அஸோவ் படையினா் (கோப்புப் படம்). ~(கோப்புப் படம்) ~மரியுபோலில் தங்களால் கடந்த மாதம் 16-ஆம் தேதி தாக்குதல் நடத்தப்பட்ட திரையரங்கி

ADVERTISEMENT
ADVERTISEMENT