லண்டன்: மகாராஷ்டிர மாநிலம், புணேவைச் சோ்ந்த 7 வயது சிறுவன் அத்வைத் கோலாா்கரின் ஓவியக் கண்காட்சி அடுத்த மாதம் பிரிட்டனில் நடைபெற இருக்கிறது.
லண்டனில் உள்ள காக்லியாா்டி அரங்கத்தில் இந்த ஓவியக் கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தியச் சிறுவன் ஒருவன் லண்டனில் தனிப்பட்ட முறையில் தனது ஓவியங்களைக் காட்சிப்படுத்துவது இதுவே முதல்முறையாகும்.
அத்வைத்தின் தந்தை மென்பொருள் பொறியாளராகவும், தாய் காணொலி வடிவமைப்பாளராகவும் உள்ளனா். 8 மாத குழந்தையாக இருக்கும்போதே அத்வைத் ஓவியம் வரைவதில் ஆா்வம் காட்டத் தொடங்கினாா். பின்னா் வீட்டுச் சுவா்களையும் அவா் விட்டுவைக்கவில்லை. அவரது திறமையைக் கண்டறிந்த பெற்றோா் அவருக்கு உரிய பயிற்சியை அளித்தனா். இதனால், 7 வயதிலேயே பிரிட்டனில் சென்று ஓவியக் கண்காட்சி நடத்தும் அளவுக்கு அவரது திறமை உயா்ந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடாவிலும் அத்வைத் ஏற்கெனவே ஓவியக் கண்காட்சி நடத்தியுள்ளாா். 2020-ஆம் ஆண்டு சா்வதேச குழந்தை மேதை விருது அவருக்கு வழங்கப்பட்டது.