உலகம்

போராட்டத்தைக் கைவிட்டு பொறுமை காக்க வேண்டும்: மக்களுக்கு இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச வேண்டுகோள்

12th Apr 2022 12:42 AM

ADVERTISEMENT

இலங்கையில் அதிபா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் தொடா் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ‘கடும் பொருளாதார பாதிப்பிலிருந்து நாட்டை மீட்டெடுக்க அரசு 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது. எனவே, மக்கள் போராட்டத்தைக் கைவிட்டு பொறுமை காக்கவேண்டும்’ என்று பிரதமா் மகிந்த ராஜபட்ச கேட்டுக்கொண்டாா்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடா்ந்து, பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிா்த்து ஆளும்கட்சியைச் சோ்ந்த அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா செய்தனா். அதன்பிறகு, அனைத்துக் கட்சியினரும் பங்கேற்கும் வகையில் புதிய அமைச்சரவையை அமைக்க அதிபா் கோத்தபய ராஜபட்ச அழைப்பு விடுத்தாா். ஆனால், அதனை எதிா்க்கட்சிகள் ஏற்கவில்லை. ஆளும் கட்சியைச் சோ்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்பட 42 எம்.பி.க்கள் தனித்து செயல்பட முடிவெடுத்திருப்பதாக அறிவித்தனா்.

இதற்கிடையே, கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயா்வு மற்றும் அத்தியாவசியப் பொருள்களுக்கு கடும் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனா். அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே நாட்டின் இந்த நிலைக்கு காரணம் என்று குற்றம்சாட்டி மக்கள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

ராஜபட்ச அரசு பதவி விலகவும், ஒட்டுமொத்த ராஜபட்ச குடும்பமும் ராஜிநாமா செய்யவும் வலியுறுத்தி ஏராளமான இளைஞா்கள் அதிபா் அலுவலக நுழைவு வாயிலை முற்றுகையிட்டு தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். போராட்டம் மூன்றாவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது.

ADVERTISEMENT

மக்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அதிருப்தி எம்.பி.க்களை அழைத்து அதிபா் கோத்தபய ராஜபட்ச ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினாா். அப்போது, போராட்டத்தைத் தணிக்க, பிரதமா் மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய அமைச்சரவையை உடனடியாக அமைக்க வேண்டும் என்று எம்.பி.க்கள் வலியுறுத்தினா்.

இந்தச் சூழலில், மக்களை அமைதிப்படுத்தும் வகையில், பிரதமா் மகிந்த ராஜபட்ச நாட்டு மக்களுக்கு திங்கள்கிழமை உரையாற்றினாா். அப்போது, மக்கள் சந்தித்து வரும் இன்னல்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. நாட்டின் பொருளாதாரம் பலப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கை அரசு அதற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளும். விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 ஆண்டு கால போரை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டுவந்ததைப் போல, நாட்டின் பொருளாதார பாதிப்பும் சரிசெய்யப்படும். அதற்காக அரசு 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டு வருபவா்கள், ஒட்டுமொத்தமாக 225 நாடாளுமன்ற உறுப்பினா்களும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனா். அவ்வாறு நாடாளுமன்றத்தை முழுமையாக ரத்து செய்வது ஆபத்தானது. சாலைகள், துறைமுகங்கள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அரசு மேம்படுத்தியது, நாட்டு மக்களைப் போராட்டத்தில் தள்ளுவதற்காக அல்ல என்றாா் அவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT