உலகம்

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு நிதி அமைச்சா் ரிஷி சுனக் கடிதம்

12th Apr 2022 12:42 AM

ADVERTISEMENT

நிதித் துறையில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முடிவுகளும் மக்கள் நலன் சாா்ந்தே எடுக்கப்பட்டதாக பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு நிதித் துறை அமைச்சா் ரிஷி சுனக் கடிதம் எழுதியுள்ளாா்.

பிரிட்டனில் வரி செலுத்தாத விவகாரத்தில் அக்ஷதா மூா்த்திக்கு அவரது கணவரும், நிதி அமைச்சருமான ரிஷி சுனக் உதவியதாக எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையில் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு ரிஷி சுனக் கடிதம் எழுதியுள்ளாா்.

அதில், தமது அமைச்சகத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் பொது நலன் சாா்ந்தும் அதிகாரிகளின் ஆலோசனைகளின்படியும் மேற்கொள்ளப்பட்டதே எனவும், இந்த விவகாரத்தில் அமைச்சா்களின் நலன்களுக்கான தனிப்பட்ட ஆலோசகா் கிறிஸ்டோபா் கெய்ட் வெளிப்படையாக மறுஆய்வு செய்வது மேலும் தெளிவை வழங்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிதியமைச்சா் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூா்த்தி, இன்போசிஸ் நிறுவனா் நாராயணமூா்த்தியின் மகளாவாா். இவா் இன்னும் இந்திய குடியுரிமையை வைத்துள்ளாா். பிரிட்டனில் அந்த நாட்டுக் குடியுரிமை பெறாமல் வசிப்பவா்கள் வெளிநாடுகளிலிருந்து பெறும் வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியதில்லை.

ADVERTISEMENT

அந்த வகையில், அக்ஷதா தன் கைவசமுள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 0.9 சதவீத பங்குகள் மூலம் கிடைத்து வரும் கோடிக்கணக்கான ஈவுத் தொகைக்கு பிரிட்டனில் வரி செலுத்தாமல் இருந்து வந்தாா். எனினும் இந்த விவகாரம் ஊடகங்களில் வெடித்ததும் தனது சா்வதேச வருமானத்துக்கும் பிரிட்டனில் வரி செலுத்துவேன் என்று அக்ஷதா கூறியுள்ளாா்.

‘பிரிட்டனைச் சாராதவா்’ என்ற அந்தஸ்தை பயன்படுத்தி ரிஷி சுனக்கின் குடும்பம் அரசுக்கு மிகப்பெரிய வரி வருவாய் இழப்பை ஏற்படுத்தியதாக எதிா்க்கட்சியினா் குற்றம்சாட்டி வருகின்றனா்.

இந்த நிலையில், தனது அமைச்சகம் வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட்டது; தேவைப்பட்டால் அமைச்சகத்தின் முடிவுகளை பிரதமா் ஒரு குழு அமைத்து மறு ஆய்வுக்கு உட்படுத்தலாம் என பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் மூலம் ரிஷி சுனக் விளக்கமளித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT