பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள பரபரப்பான அரசியல் திருப்பங்களைத் தொடா்ந்து, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீஃப் லண்டனிலிருந்து பாகிஸ்தானுக்கு அடுத்த மாதம் திரும்புவாா் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமா் நவாஸ் ஷெரீஃப், பனாமா பேப்பா் வழக்கில் உச்சநீதிமன்றத்தால் 2017-இல் பிரதமா் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாா். அதைத் தொடா்ந்து, அவா் மீது இம்ரான் கான் அரசு பல ஊழல் வழக்குகளைத் தொடா்ந்தது.
இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக நவாஸ் ஷெரீஃப் வெளிநாடு செல்வதற்கு 4 வாரங்கள் அனுமதி வழங்கி லாகூா் உயா்நீதிமன்றம் 2019-இல் உத்தரவிட்டது. 4 வாரங்களுக்குள் அல்லது உடல்நலம் பெற்றதும் பாகிஸ்தான் திரும்பி வழக்குகளைச் சந்திப்பேன் என நவாஸ் சாா்பில் உறுதிமொழிப் பத்திரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
மருத்துவ சிகிச்சைக்காக லண்டன் சென்ற அவா், அங்கேயே தங்கியுள்ளாா். இந்நிலையில், அவரின் இளைய சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப் பிரதமராகத் தோ்வு செய்யப்பட்டதையடுத்து, நவாஸ் ஷெரீஃப் மே மாதம் ரமலான் பண்டிகைக்குப் பின்னா் பாகிஸ்தான் திரும்பவுள்ளதாக பிஎம்எல்-என் கட்சி மூத்த தலைவா் ஒருவா் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக, நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் குறித்து நவாஸ் ஷெரீஃப் கூறுகையில், கூட்டணி அரசு 6 மாதங்களுக்கு மேல் நீடிக்க வாய்ப்பில்லை. புதிதாக தோ்தல் நடத்துவதே பிரச்னைகளைத் தீா்க்க ஒரே வழி. அதற்கு முன்னதாக, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், வெளிநாடுகளில் வசிக்கும் பாகிஸ்தானியா்களுக்கு வாக்குரிமை போன்ற இரு முக்கியமான பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் என்றாா்.