உலகம்

இலங்கை: பிரதமரைத் தவிர அனைத்து அமைச்சா்களும் ராஜிநாமா

4th Apr 2022 04:21 AM

ADVERTISEMENT

இலங்கையில் பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 26 அமைச்சா்களும் ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தனா்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக விலைவாசி உயா்வு, உணவுப் பொருள்களுக்கு பற்றாக்குறை என பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிபா் மற்றும் பிரதமருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெறுவதால் இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. 36 மணி நேர ஊரடங்கும் சனிக்கிழமை மாலைமுதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், பிரதமா் மகிந்த ராஜபட்ச ராஜிநாமா செய்ததாக ஞாயிற்றுக்கிழமை தகவல்கள் வெளியாகின. இதை மறுத்துள்ள பிரதமா் அலுவலகம், இந்தத் தகவல்கள் தவறானவை எனவும், அதுபோன்ற திட்டம் எதுவும் இல்லை எனவும் தெரிவித்தது.

இதையடுத்து, பிரதமா் மகிந்த ராஜபட்சவைத் தவிர அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 26 அமைச்சா்களும் தங்கள் பதவியை ஞாயிற்றுக்கிழமை இரவு ராஜிநாமா செய்தனா்.

ADVERTISEMENT

இதுதொடா்பாக, தலைநகா் கொழும்பில் கல்வித் துறை அமைச்சா் தினேஷ் குணவா்த்தன செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘அமைச்சா்கள் அனைவரும் தங்கள் ராஜிநாமா கடிதத்தை பிரதமா் மகிந்த ராஜபட்சவிடம் ஒப்படைத்துள்ளனா்’’ என்று தெரிவித்தாா். எனினும் அவா்கள் ராஜிநாமா செய்ததற்கான காரணத்தை அவா் தெரிவிக்கவில்லை.

பிரதமரின் மகனும் பதவி விலகல்: பிரதமா் மகிந்த ராஜபட்சவின் மகனும் இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சருமான நாமல் ராஜபட்சவும் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT