உலகம்

ஐ.நா. பொதுச் சபையில் உலக நாடுகள் உரக்கச் சொன்னது என்ன?

30th Sep 2021 03:30 AM

ADVERTISEMENT

 

ஐ.நா. பொதுச் சபையின் 76-ஆவது ஆண்டுக் கூட்டத்தில் பொது விவாதம் செப். 21-ஆம் தேதி தொடங்கி செப். 27-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் நேரில் பங்கேற்று உரையாற்றினர். சுமார் 60 நாடுகளைச் சேர்ந்த தலைவர்களின் பதிவு செய்யப்பட்ட விடியோ உரை காணொலி முறையில் ஒளிபரப்பப்பட்டது. கரோனா பெருந்தொற்றிலிருந்து உலகம் சிறிது சிறிதாக மீண்டு வரும் நிலையில் நேரடியாக நடத்தப்பட்ட இக்கூட்டம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் தங்கள் உரையில் முக்கியமாக வலியுறுத்திய கருத்துகள்...


இந்தியா

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்று உரையாற்றினார். சர்வதேச தடுப்பூசி நிறுவனங்கள் இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தியை மேற்கொள்ள வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். பயங்கரவாதத்துக்கு ஆதரவளிக்கும் நாடுகளுக்கு அதனாலேயே ஆபத்து ஏற்படும் என பாகிஸ்தானை மறைமுகமாக மோடி குறிப்பிட்டார். 

ADVERTISEMENT

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் சீனாவை மறைமுகமாகச் சாடிய மோடி, பெருங்கடல்கள் பகிரப்பட்ட பாரம்பரியம். அவற்றை நாடுகளின் விரிவாக்க நடவடிக்கையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்றார். பிற நாடுகளுக்கு எதிரான பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆப்கன் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய சர்வதேச சமூகத்துக்கு அவர் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்கா

சீனாவின் பெயரைக் குறிப்பிடாமல், அந்நாட்டுடன் அதிகரித்து வரும் பதற்றம் குறித்த கவலையை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஒப்புக்கொண்டார். அதேவேளையில், "நாங்கள் புதிய பனிப் போரையோ அல்லது பிளவுபட்ட உலகத்தையோ விரும்பவில்லை' என்றார்.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறியது குறித்து, "இடைவிடாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். உலகம் முழுவதும் மக்களை மேம்படுத்துவதற்கான புதிய வழிகளில் எங்களது திறனை முதலீடு செய்யும் புதிய சகாப்தத்தை தொடங்கியுள்ளோம்' என்றார்.

பிரிட்டன்

பருவநிலை மாற்றம் குறித்த பிரச்னைக்கு பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் முக்கியத்துவம் அளித்தார். அவர் தனது உரையில், "தொழில்புரட்சிக்கு முந்தைய நிலையைவிட உலகின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸாக கட்டுப்படுத்துவதற்கான மாற்றங்களை உலகம் இப்போது நடைமுறைப்படுத்த வேண்டும்' எனக் கேட்டுக்கொண்டார்.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீஸன் தனது பதிவு செய்யப்பட்ட உரையில், சர்வதேச கூட்டணியின் மதிப்பை வலியுறுத்தினார். அமெரிக்கா- பிரிட்டன்- ஆஸ்திரேலியா இடையிலான "ஆக்கஸ்' கூட்டணிக்கு பிரான்ஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவர் இக்கருத்தைக் கூறினார்.

சீனா

அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றத்தை மறைமுகமாக தனது பதிவு செய்யப்பட்ட உரையில் குறிப்பிட்டார் சீன அதிபர் ஷி ஜின்பிங். "நாடுகளுக்கு இடையிலான சச்சரவுகள் பேச்சுவார்த்தை மூலம் கையாளப்பட வேண்டும். ஒரு நாட்டின் வெற்றியானது மற்றொரு நாட்டின் தோல்வியாக கருதப்படக் கூடாது.
மோதலையும், ஒரு குறிப்பிட்ட நாட்டை தனிமைப்படுத்துவதையும் உலகத் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்' என்றார் அவர்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் பதிவு செய்யப்பட்ட உரையில், "ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைக்கு பாகிஸ்தான் காரணம் என அமெரிக்காவிலிருந்தும், ஐரோப்பிய யூனியனிலிருந்தும் அரசியல்வாதிகள் குற்றம்சாட்டுகின்றனர். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் கூட்டணியில் இணைந்ததையடுத்து, ஆப்கானிஸ்தான் தவிர அதிகம் பாதிக்கப்பட்டது பாகிஸ்தான்' என்றார். 

இலங்கை

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதை ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு தலைவர் மிஷெல் பாச்சலெட் அண்மையில் கண்டித்திருந்தார். அதற்கு பதிலளிக்கும் வகையில், ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பேசிய அதிபர் கோத்தபய ராஜபட்ச, "இலங்கையில் தமிழர்களுக்கு நீடித்த அமைதியை அடைய உள்நாட்டு அமைப்புகள் மூலம் முயற்சிப்பது அவசியம்' என்றார். "அமைதியை அடைவது என்பது தொடர்ச்சியான செயல்முறை ஆகும். உள்நாட்டு அமைப்புகளுக்கு இதற்கு போதிய வாய்ப்பளிக்க வேண்டும். இந்த அமைப்புகள் செய்யும் பணியை வெளி அமைப்புகள் மாற்றியமைக்கக் கூடாது' என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரிஸ் கூறியதும் குறிப்பிடத்தக்கது.

வங்கதேசம்

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது உரையில், தடுப்பூசி சமநிலை, கரோனா தொற்றிலிருந்து நிலையான மீட்பு, பருவநிலை சவால்கள் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினார். தங்கள் நாட்டில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்கயா அகதிகள் தம் சொந்த நாடான மியான்மருக்கு திரும்ப சர்வதேச சமூகம் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அவர் அழைப்பு விடுத்தார்.

ஜப்பான்

ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா தனது உரையில், "கரோனா நோய்த்தொற்றால் உலகம் அளவிட முடியாத துயரத்தை எதிர்கொண்டாலும், டோக்கியோ ஒலிம்பிக் போட்டியானது மக்களிடையே உலகளாவிய ஒற்றுமையின் அடையாளமாக நிரூபிக்கப்பட்டது. ஒலிம்பிக் போட்டியை நடத்துவதில் பல்வேறு கருத்துகள் இருந்தாலும் எங்களது கடமையை நிறைவேற்றினோம்' எனப் பெருமிதம் கொண்டார்.

ரஷியா, பிரான்ஸ்

ரஷியா சார்பில் அதன் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி வி லாவ்ரோவ் கலந்துகொண்டார். "ஐ.நா. சாசனத்தின் நோக்கங்கள், கோட்பாடுகளை நிலைநாட்ட புதிய ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு அவர் அழைப்பு விடுத்தார். பிரான்ஸ் சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜான் ஈவ் லெட்ரியன் பங்கேற்று, கரோனா, பருவநிலை மாற்றம், நாடுகள் இடையிலான சச்சரவுகள் போன்றவற்றுக்கு தீர்வு காண பலதரப்பு ஒத்துழைப்பை 
வலியுறுத்தினார்.


பிரேஸில் ஏன் முதலில்?

ஐ.நா. பொதுச் சபையின் ஆண்டு கூட்டத்தில் முதலில் உரையாற்றும் வாய்ப்பு பிரேஸிலுக்கு வழங்கப்படுவது பாரம்பரியமாக உள்ளது. பிரேஸிலுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படுவது என்பது குறித்து இரு கருத்துகள் உள்ளன.

1. ஐ.நா. சபை 1945-இல் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் அதன் ஆண்டுக் கூட்டத்தில் முதலில் உரையாற்ற எந்த நாடும் தயாராக இல்லை. பிரேஸில்தான் முதலில் உரையாற்ற தாமாக முன்வந்தது. அதுமுதல் பிரேஸிலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்து வருகிறது.

2. பிரேஸில் பிரதிநிதி ஓஸ்வால்டோ அரன்கா ஐ.நா. பொதுச் சபையின் முதல் சிறப்புக் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். பொதுச் சபையின் இரண்டாவது கூட்டத்துக்கும் அவரே தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுமுதல் பிரேஸிலுக்கு முதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT