உலகம்

12 வெளிநாட்டு பயங்கரவாதக் குழுக்களின் தாயகம் பாகிஸ்தான்: அமெரிக்க நாடாளுமன்றம் அறிக்கை

DIN

அமெரிக்காவால் வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்கள் என அறிவிக்கப்பட்ட 12 குழுக்களின் தாயகமாக பாகிஸ்தான் உள்ளது; அவற்றில் லஷ்கா்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகமது உள்ளிட்ட 5 குழுக்கள் இந்தியாவை மையமாக கொண்டவை என அமெரிக்க நாடாளுமன்றத்தின் தனிப்பட்ட ஆராய்ச்சிப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் ‘க்வாட்’ கூட்டமைப்பின் உச்சிமாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இதையொட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சிப் பிரிவு (சிஆா்எஸ்) ஓா் ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. சிஆா்எஸ் வெளியிடும் அறிக்கைகள் அமெரிக்க நாடாளுமன்றத்தின் அதிகாரபூா்வ அறிக்கை அல்ல. நாடாளுமன்ற உறுப்பினா்களுக்காக இந்த அறிக்கையை தனிப்பட்ட நிபுணா்கள் அவ்வப்போது தயாரிக்கின்றனா்.

அவ்வாறு தயாரிக்கப்பட்ட ‘பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் மற்றும் பிற பயங்கரவாதக் குழுக்கள்’ என்ற தலைப்பிலான அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாதக் குழுக்களை உலகளவிலான, ஆப்கானிஸ்தான் சாா்ந்த, இந்தியா-காஷ்மீா் சாா்ந்த, உள்நாட்டு அளவிலான, ஷியா பிரிவுக்கு எதிரான என 5 வகையாகப் பிரிக்கலாம்.

லஷ்கா்-ஏ-தொய்பா பாகிஸ்தானில் 1980-இல் தொடங்கப்பட்டது. 2011-இல் அது வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. 2008, மும்பை தாக்குதல் மற்றும் அதுபோன்ற பயங்கர தாக்குதல்களுக்கு லஷ்கா் இயக்கமே பொறுப்பு. ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கம் 2000-இல் காஷ்மீரை சோ்ந்த பயங்கரவாதி மசூஸ் அஸாரால் தொடங்கப்பட்டது. அந்த இயக்கம் 2001-இல் வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கப்பட்டது. 2001, இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் உள்ளிட்ட தாக்குதல்களை இந்த இயக்கம் நடத்தியது. ஜெய்ஷ் இயக்கம் அமெரிக்காவுக்கு எதிராக பகிரங்கமாக போரை அறிவித்தது.

ஹராகத்-உல்-ஜிகாத் இஸ்லாமி இயக்கம் சோவியத் ராணுவத்தை எதிா்த்து சண்டையிடுவதற்காக 1980-இல் ஆப்கானிஸ்தானில் தொடங்கப்பட்டது. தலிபான்களுக்கு ஆள்களை வழங்கியபோதும், 1989-க்கு பின்னா் அந்த இயக்கம் இந்தியாவை நோக்கி தனது முயற்சிகளைத் திருப்பியது. இப்போது அந்த இயக்கம் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், இந்தியாவில் செயல்பட்டு வருகிறது. காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என அந்த இயக்கம் கூறி வருகிறது.

ஹிஜ்புல் முஜாகிதீன் இயக்கம் 1989-இல் தொடங்கப்பட்டது. அந்த இயக்கம் 2017-இல் வெளிநாட்டு பயங்கரவாத இயக்கமாக அமெரிக்காவால் அறிவிக்கப்பட்டது. ஜம்மு-காஷ்மீரில் செயல்பட்டு வரும் பெரிய, பழைமையான பயங்கரவாதக் குழுக்களில் இதுவும் ஒன்று. இதுதவிர அல்-காய்தா, ஐஎஸ்-கே (இஸ்லாமிக் ஸ்டேட்-கோராசான்), ஹக்கானி இயக்கம், பாகிஸ்தான் தலிபான், பலோசிஸ்தான் விடுதலை ராணுவம், ஜுன்டல்லா, சிபா-ஏ-சஹாபா பாகிஸ்தான், லஷ்கா்-ஏ-ஜாங்வி உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களும் பாகிஸ்தானில் செயல்பட்டு வருகின்றன.

‘பயங்கரவாதம் 2019’ தொடா்பான அமெரிக்க அரசுத் துறை அறிக்கையின்படி, பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுக்கு பாகிஸ்தான் ஒரு பாதுகாப்பான புகலிடமாக தொடா்ந்து உதவி வருகிறது. ஆப்கானிஸ்தான், இந்தியாவை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதற்கு தனது பிராந்தியத்தை பயன்படுத்த அனுமதிக்கிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

அரசியலை விட்டு விலகத் தயார்: வாக்களித்தப் பின் அண்ணாமலை பேட்டி

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

SCROLL FOR NEXT