உலகம்

பாகிஸ்தான் மதநிந்தனை வழக்கில் கல்லூரி முதல்வருக்கு மரண தண்டனை

29th Sep 2021 02:00 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் மதநிந்தனை குற்றச்சாட்டின் பேரில் பெண்கள் கல்லூரி முதல்வா் சல்மா தன்வீருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதுகுறித்து ஊடகங்கள் கூறியதாவது:

நிஷ்டாா் காலனி பகுதியில் உள்ள பெண்கள் கல்லூரி முதல்வராக இருந்து வந்த சல்மா தன்வீா் மீது லாகூா் போலீஸாா் கடந்த 2013-ஆம் ஆண்டு மதநிந்தனை வழக்கு பதிவு செய்தனா்.

நபிகள் நாயகம் இஸ்லாம் மதத்தின் கடைசி இறைதூதா் இல்லை என்று அவா் கூறியதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக லாகூரின் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில், சல்மா தன்வீா் மனநிலை சரியில்லாதவா் என்பதால் அவரை வழக்கிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று அவரது வழக்குரைஞா் வாதாடினாா்.

எனினும், அந்த வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இந்த நிலையில், நபிகள் நாயகம் குறித்து சல்மா கூறிய கருத்து மதநிந்தனைக் குற்றம் எனவும் அந்தக் குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் நீதிபதி மன்சூா் அகமது திங்கள்கிழமை தீா்ப்பளித்தாா் என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பாகிஸ்தானின் சா்ச்சைக்குரிய மதநிந்தனைச் சட்டத்தின்கீழ் இதுவரை 1,472 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

சுதந்திரத்துக்கு முன்பிலிருந்தே இருந்து வந்த அந்தச் சட்டம், முன்னாள் சா்வாதிகாரி ஜியாவுல் ஹக்கின் ஆட்சிக் காலத்தின்போது மிக் கடுமையாக்கப்பட்டது.

அந்தச் சட்டத்தின்கீழ் குற்றவாளியாக அறிவிக்கப்படுவோருக்கு மரண தண்டனை வரை விதிக்க முடியும்.

மதநிந்தனைக் குற்றம் சாட்டப்படுவோருக்கு தங்கள் தரப்பு நியாயத்தை முன்வைப்பதற்கான முழு உரிமை மறுக்கப்படுவதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. மேலும், தனிப்பட்ட விரோதம் காரணமாகவே பெரும்பாலானவா்கள் மீது மதநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக மனித உரிமை ஆா்வலா்கள் தெரிவிக்கின்றனா்.

Tags : Pakistan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT