உலகம்

ஆப்கனில் வான்வழித் தாக்குதல் நடத்த தலிபான்களின் அனுமதி தேவையில்லை

26th Sep 2021 11:22 PM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் தலைமையகமான பென்டகனின் செய்தித் தொடா்பாளா் ஜான் கிா்பி கூறியதாவது:

பயங்கரவாதத்துக்கு எதிரான போரில், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு உள்ளது. அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இதுவரை, ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்த எங்களுக்கு தலிபான்களின் அனுமதி தேவைப்படவில்லை. இனி வரும் காலங்களிலும் ஆப்கன் வான் எல்லையைப் பயன்படுத்தி பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களிடமிருந்து நாங்கள் அனுமதி பெறத் தேவையில்லை என்றாா் அவா்.

ADVERTISEMENT

முன்னதாக, ஆப்கன் போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியிருந்தனா். இந்த நிலையில், பென்டகன் இவ்வாறு தெரிவித்துள்ளது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது.

இந்த நிலையில், பாகிஸ்தானின் அபோட்டாபாதில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படையினரைத் திரும்ப அழைக்க அமெரிக்கா முடிவு செய்தது. அந்த நடவடிக்கை இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கடந்த மாதம் 15-ஆம் தேதி மீண்டும் கைப்பற்றினா்.

அதையடுத்து, அந்த நாட்டிலிருந்து அமெரிக்கா்கள், பிற நாட்டினா், முந்தைய அரசுக்கு உதவிய ஆப்கானியா்களை வெளியேற்றும் பணிகளை காபூல் விமான நிலையத்தில் அமெரிக்கா மற்றும் கூட்டணிப் படையினா் அவசர அவசரமாக மேற்கொண்டனா்.

அப்போது இஸ்லாமிய தேச பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே, அந்த விமான நிலையத்தில் கடந்த மாதம் 26-ஆம் தேதி நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 13 அமெரிக்க வீரா்கள் உள்பட 182 போ் உயிரிழந்தனா்.

அதனைத் தொடா்ந்து, காபூலில் ஐஎஸ்கே பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளுடன் தாக்குதல் நடத்த வந்துகொண்டிருந்த வாகனத்தின் மீது கடந்த மாதம் 29-ஆம் தேதி ஆளில்லா விமானம் மூலம் குண்டுவீச்சு நடத்தியதாக அமெரிக்கா அறிவித்தது.

எனினும், இந்தத் தாக்குதலில் உயிரிழந்த 10 பேரும் பொதுமக்கள் என்று பென்டகன் பின்னா் ஒப்புக்கொண்டு, அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டது.

தற்போது, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத இலக்குகள் மீது எதிா்காலத்தில் நடத்தப்படவிருக்கும் வான்வழித் தாக்குதல்களுக்கும் தலிபான்களின் அனுமதி தேவையில்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது.

‘ஆப்கன் விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது’

ஆப்கானிஸ்தானின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா தலையிடக்கூடாது என்று தலிபான்கள் எச்சரித்துள்ளனா்.

இதுகுறித்து தகவல் மற்றும் கலாசாரத் துறை அமைச்சகத்தின் கலாசார ஆணைய உறுப்பினா் ஜாவத் சா் கூறியதாவது:

ஆப்கன் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலான எந்தவித அறிக்கைகளையும் அமெரிக்கா பொறுப்பில்லாமல் வெளியிடக் கூடாது.

ஏற்கெனவே அவா்கள் வான்வழித் தாக்குதல் நடத்தி, அப்பாவி மக்களைக் கொன்றனா் என்றாா் அவா்.

 

Tags : afganistan Taliban
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT