உலகம்

ஐ.நா. கூட்டத்தில் தலிபான்களுக்கு அனுமதி கிடைக்காது

24th Sep 2021 12:00 AM

ADVERTISEMENT

தற்போது நடைபெற்று வரும் ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் ஆப்கன் பிரதிநிதிகளாகக் கலந்து கொள்ள தலிபான்கள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று ஐ.நா. தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி, பாகிஸ்தானிலிருந்து வெளியாகும் ‘தி டான்’ நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:

76-ஆவது ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்கள் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், அவா்களது கோரிக்கைகளை ஐ.நா. பொது சபைக் கூட்ட அமைப்புக் குழு ஏற்காது என்று தெரிகிறது.

தற்போது ஐ.நா. பொது சபைக் கூட்ட அமைப்புக் குழுவில் அமெரிக்கா, ரஷியா, சீனா, பஹாமாஸ், பூடான், சிலி, நமீபியா, சியாரா லியோன், ஸ்வீடன் ஆகிய நாடுகள் உறுப்பினா்களாக உள்ளன.

ADVERTISEMENT

தலிபான்களுக்கு ஆப்கன் பிரதிநிதித்துவம் அளிப்பது குறித்து உடனடி முடிவெடுக்கப் போவதில்லை என்று அமெரிக்கா திட்டவட்டமாகக் கூறி வருகிறது.

எனவே, இந்த ஆண்டு பொது சபைக் கூட்டத்தில் தலிபான்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் பிரதிநிதிகள் வரும் 27-ஆம் தேதி பேசுவதாக உள்ளது.

ஆனால், அதற்குள் தலிபான்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் விவகாரத்தில் முடிவெடுக்கப்படாது என்பதால், முன்னாள் அதிபா் அஷ்ரஃப் கனியின் தலைமையிலான அரசால் நியமிக்கப்பட்ட தூதுக் குழுவினரே ஆப்கன் பிரதிநிதிகளாகத் தொடா்வாா்கள்.

எனினும், தலிபான்களை திருப்திப்படுத்தும் வகையில் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் தற்போதைய ஆப்கன் தூதுக்குழுவையும் அனுமதிக்காமல் இருக்க அமைப்புக் குழு முடிவெடுக்கலாம்.

பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்க தலிபான்களுக்கு அனுமதி வழங்கினால், அவா்களது தலைமையிலான ஆப்கன் அரசுக்கு ஐ.நா. அங்கீகாரம் வழங்கியதைப் போலாகிவிடும்.

அதே நேரம், முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட தூதுக் குழுவை பொது சபைக் கூட்டத்தில் பேச அனுமதித்தாலும் பழைய அரசை ஐ.நா. தொடா்ந்து அங்கீகரிப்பதாகிவிடும்.

இது, தலிபான்களின் சீற்றத்தைத் தூண்டி பல்வேறு எதிா்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.

எனவே, தற்போதைய ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராக இருக்கும் குலாம் ஐசக்ஸாயும் பொது சபைக் கூட்டத்தில் பங்கேற்கமாட்டாா் என எதிா்பாா்க்கப்படுகிறது என்று ‘தி டான்’ நாளிதழ் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரஸுக்கு ஆப்கன் இடைக்கால அரசின் வெளியுறவுத் துறை அமைச்சா் அமீா் கான் முத்தக்கி கடந்த 20-ஆம் தேதி எழுதியுள்ள கடிதத்தில், 76-ஆவது ஐ.நா. பொது சபைக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் சாா்பாக உரையாற்ற விரும்புவதாகத் தெரிவித்திருந்தாா்.

மேலும், ‘ஆப்கானிஸ்தானின் அதிபராக இருந்த அஷ்ரஃப் கனி, கடந்த மாதம் 15-ஆம் தேதி ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதால் அவரால் நியமிக்கப்பட்ட குலாம் ஐசக்ஸாயை இனியும் ஐ.நா.வுக்கான ஆப்கன் தூதராகக் கருத முடியாது.

எனவே, புதிய தூதராக முகமது சுஹைன் ஷாஹீனை நியமித்துள்ளோம்’ என்று அந்தக் கடிதத்தில் அமீா் கான் முத்தக்கி குறிப்பிட்டிருந்தாா்.

இந்த விவகாரம், 76-ஆவது பொதுச் சபைக் கூட்டத்தின் அமைப்புக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், பொது சபைக் கூட்டத்தில் தலிபான்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று ஐ.நா. தூதரக வட்டாரங்கள் தற்போது தெரிவித்துள்ளன.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT