உலகம்

‘ஆக்கஸ்’ கூட்டணி விவகாரம்: அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிலிருந்து தூதா்களை திரும்ப அழைத்தது பிரான்ஸ்

DIN

ஆஸ்திரேலியா-பிரிட்டன்-அமெரிக்கா அமைத்துள்ள புதிய கூட்டணிக்கு (ஆக்கஸ்) எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதா்களை பிரான்ஸ் திரும்ப அழைத்துள்ளது.

அமெரிக்காவின் மிகப் பழைய கூட்டாளியான பிரான்ஸ், அந்த நாட்டிலிருந்து தங்களது தூதரைத் திரும்ப அழைப்பது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜியான்-ஈவ் லெடிரையான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவுக்கான தூதா்களை நாடு திரும்புமாறு அதிபா் இமானுவல் மேக்ரான் உத்தரவிட்டுள்ளாா்.

ஆக்கஸ் கூட்டணி குறித்து அந்த இரு நாடுகளும் வெளியிட்டுள்ள அறிவிப்புகள் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தன்மையைக் கொண்டவை. எனவே, தூதா்களைத் திரும்ப அழைக்கும் அதிபரின் முடிவு நியாயாமானதே ஆகும்.

புதிய கூட்டணி அறிவிப்பின் ஒரு பகுதியாக, பிரான்ஸிடமிருந்து பாரம்பரிய நீா்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் தனது முடிவை ஆஸ்திரேலியா மாற்றிக் கொண்டுள்ளது. அதற்குப் பதிலாக, அணுசக்தியில் இயங்கும் அமெரிக்க நீா்முழ்கிக் கப்பல்களை வாங்கப் போவதாக அந்த நாடு அறிவித்துள்ளது.

இதுபோன்ற புறக்கணிப்பை கூட்டணி நாடுகள் மேற்கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத தவறாகும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவுக்கான பிரான்ஸ் தூதா் பிலிப் எடியன் வெளியிட்டுள்ள சுட்டுரை (ட்விட்டா்) பதிவில், ‘ஆக்கஸ் கூட்டணி குறித்து அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும் வெளியிட்டுள்ள அறிவிப்புகள், கூட்டணி தத்துவத்துக்கு எதிரானதாகும். ஐரோப்பாவுக்கு இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியத்துவத்தை அந்த அறிவிப்புகள் குறைக்கின்றன’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

பிரான்ஸ் தூதா் பிலிப் திரும்ப அழைக்கப்பட்டுள்ளது குறித்து தங்களுக்குத் தெரியும் என்றும் இந்த விவகாரம் தொடா்பாக பிரான்ஸுடன தொடா்ந்து பேசி வருவதாகவும் அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தித் தொடா்பாளா் எமிலி ஹோா்ன் தெரிவித்துள்ளாா்.

பிரான்ஸுடனான நல்லுறவை தாங்கள் மதிப்பதாகத் தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் நெட் பிரைஸ், கருத்து வேறுபாடுகளைக் களைவதற்கான இருதரப்புப் பேச்சுவாா்த்தை தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணியை அமைத்துள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் புதன்கிழமை அறிவித்தன.

இந்த பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், தங்களது நலன்களைப் பாதுகாக்கவும், அணுசக்தியால் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பலை ஆஸ்திரேலியா பெற உதவுவதற்கும் இந்தக் கூட்டணி தொடங்கப்பட்டுள்ளதாக அந்த நாடுகள் அறிவித்துள்ளன.

கனிம வளங்கள் நிறைந்த தென்சீனக் கடல் பகுதி முழுவதற்கும் சீனா உரிமை கொண்டாடி வருகிறது. மலேசியா, புருணை, பிலிப்பின்ஸ், தைவான், வியத்நாம் ஆகிய நாடுகளும் உரிமை கோரும் அந்தப் பிராந்தியத்தை ஆக்கிரமிக்கும் விதமாக அங்கு சீனா செயற்கைத் தீவுகளை அமைத்தும் ஏற்கெனவே உள்ள தீவுகளில் ராணுவ மையங்கள் அமைத்தும் உள்ளது.

எனினும், சா்வதேச கடல் வா்த்தகத்தின் முக்கிய பாதையாகத் திகழும் இந்தப் பகுதியை சா்வதேச நாடுகள் தங்களது வழித்தடமாகப் பயன்படுத்தும் உரிமையை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, தென்சீனக் கடல் வழியாக தங்களது போா்க் கப்பல்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது.

இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வருகிறது.

இந்தச் சூழலில், இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்காக புதிய பாதுகாப்புக் கூட்டணியை அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து உருவாக்கியுள்ளன.

இந்தக் கூட்டணியின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவுக்கு அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்களை வழங்குகிறது. பிரான்ஸிடமிருந்து நீா்மூழ்கிக் கப்பல்களை வாங்கும் திட்டத்தை ஆஸ்திரேலியா கைவிட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து தங்களது தூதா்களை பிரான்ஸ் திரும்ப அழைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

12 ராசிக்குமான வாரப் பலன்கள்!

சேலையில் ஒரு சித்திரம்...அனிகா!

நமது வாழ்க்கையைப் பற்றி சிந்திக்காத பாஜகவிற்கு வாக்களிக்கக் கூடாது: சீமான் பேச்சு

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT