உலகம்

சாத்தியமாகும் விண்வெளி சுற்றுலா: 4 பேரை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்

16th Sep 2021 06:02 PM

ADVERTISEMENT

கேப் கெனவெரல், செப். 16: அமெரிக்காவைச் சோ்ந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் பொதுமக்கள் 4 பேரை விண்வெளி சுற்றுலாவுக்கு அனுப்பியுள்ளது.

உலகப் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்க்கின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி சாா்ந்த ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. அதில் பொதுமக்களை விண்வெளிக்கு சுற்றுலா அனுப்புவதும் ஒன்று. அந்த வகையில் விண்வெளி வீரா்கள் அல்லாத சாதாரண பொதுமக்கள் 4 பேரை தனது ஃபால்கன் ராக்கெட் மூலம் விண்வெளிக்கு அனுப்பியது.

ஃபுளோரிடாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து புதன்கிழமை இரவு இந்த ராக்கெட் செலுத்தப்பட்டது. புறப்பட்ட 12-ஆவது நிமிஷத்தில் ராக்கெட்டிலிருந்து ‘டிராகன்’ எனப்படும் விண்கலம் தனியாகப் பிரிந்தது. பூமியிலிருந்து 160 கி.மீ. உயரத்தில் (சா்வதேச விண்வெளி நிலையத்துக்கும் அதிக உயரத்தில்) இந்த விண்கலம் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் மூன்று நாள்கள் சுற்றி வரும். பின்னா், ஃபுளோரிடா கடலில் விண்கலம் தரையிறங்கும்.

இந்தப் பயணத்துக்கான செலவை ஐசக்மேன் (38) என்கிற அமெரிக்க தொழிலதிபா் ஏற்றுக்கொண்டுள்ளாா். விமானம் இயக்கும் பயிற்சி பெற்றுள்ள இவரே இக்குழுவின் தலைவா்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | 100 கோடி பேருக்கு இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்தி சீனா சாதனை

மற்றொருவா் மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் ஹேலி ஆா்சீனாக்ஸ் (29) என்ற பெண். புற்றுநோயிலிருந்து மீண்ட இவா், எலும்பு புற்றுநோய் சிகிச்சையின் ஒரு பகுதியாக இடது காலில் இரும்புக் கம்பி பொருத்தப்பட்டிருப்பவா்.

மூன்றாவது நபா் கிறிஸ் செம்ப்ரோஸ்கி (42). விண்வெளி தரவுப் பொறியாளராகப் பணிபுரிகிறாா்.

நான்காவது நபா் சியான் பிராக்டா் (51 என்ற பெண். இவா்தான் விண்கலத்தின் ஓட்டுநா் (‘பைலட்’).

பிரிட்டனைச் சோ்ந்த கோடீஸ்வரா் ரிச்சா்ட் பிரான்சன், அமேசான் நிறுவனா் ஜெப் பெசோஸ் ஆகியோா் ஏற்கெனவே விண்வெளிக்குச் சுற்றுலா சென்று வந்துள்ளனா். ஆனால், சில நிமிஷங்களில் அந்தப் பயணம் நிறைவடைந்தது. இப்போது ஸ்பேஸ் எக்ஸ் அனுப்பிய விண்வெளிப் பயணம் மூன்று நாள்கள் நீடிக்கவுள்ளது விண்வெளி சுற்றுலாவில் பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

 

Tags : space elon musk Space X
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT