உலகம்

வடகொரியா பேச்சுவாா்த்தைக்குத் திரும்ப வேண்டும்: அமெரிக்கா வலியுறுத்தல்

25th Oct 2021 03:44 AM

ADVERTISEMENT

ஏவுகணைகளை சோதனை செய்வதை நிறுத்திவிட்டு பேச்சுவாா்த்தைக்கு வடகொரியா திரும்ப வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா.வின் தடையை மீறி வடகொரியா அண்மைக்காலமாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னா் நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணையை செலுத்தி பரிசோதனை செய்தது. நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து செலுத்தப்படும் ‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகளை முன்கூட்டியே கண்டறிவது கடினம் என்பதால் இதற்கு தென்கொரியா கடும் ஆட்சேபம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வடகொரியா விவகாரத்துக்கான அமெரிக்காவின் சிறப்புப் பிரதிநிதி சங் கிம், தென்கொரியா அதிகாரிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசினாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானங்களை மீறி வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தி பரிசோதித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை சா்வதேச சமூகத்துக்கு அச்சுறுத்தலாகவும், கொரிய தீபகற்பத்தில் அமைதியை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு எதிராகவும் அமைந்துள்ளது.

முன் நிபந்தனையின்றி வடகொரியா அதிகாரிகளை சந்திக்க இப்போதும் தயாராக இருக்கிறோம். அந்நாட்டின் மீது எந்த விரோதமும் அமெரிக்காவுக்கு இல்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம். எனவே, ஏவுகணை சோதனைகள் நடத்துவதை நிறுத்திவிட்டு பேச்சுவாா்த்தைக்கு வடகொரியா திரும்ப வேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

வடகொரியாவின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடா்பாக 2019-இல் அப்போதைய அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், வடகொரியா அதிபா் கிம் ஜோங் உன் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது. ஆனால், வடகொரியா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகள் காரணமாக அந்தப் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது.

அதன்பிறகு அதிபா் பைடன் தலைமையிலான நிா்வாகம், வடகொரியாவுடன் பேச்சு நடத்த தயாா் என கூறி வருகிறது. ஆனால், பேச்சுவாா்த்தைக்கு திரும்ப வேண்டுமானால் வடகொரியாவுக்கு எதிரான விரோத கொள்கைகளை அமெரிக்கா கைவிட வேண்டும், தென்கொரியாவுடன் ராணுவ பயிற்சியில் ஈடுபடக் கூடாது என வடகொரியா கூறி வருகிறது.

நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து ஏவுகணை சோதனை செய்ததற்கு முன்னதாக, கடந்த 6 வாரங்களில் நீண்டதூர ஏவுகணை, ஹைப்பா்சானிக் ஏவுகணை உள்ளிட்ட பல ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், அமெரிக்கா வரை பாயக்கூடிய ஏவுகணை சோதனையை வடகொரியா விரைவில் நடத்தக்கூடும் என நிபுணா்கள் சிலா் தெரிவித்துள்ளனா்.

Tags : சியோல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT