உலகம்

வங்கதேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் ஹிந்துக்கள் மீது திட்டமிட்டு தாக்குதல்: பிரதமா் ஹசீனா

25th Oct 2021 05:28 AM

ADVERTISEMENT

‘அண்மையில் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வங்கதேசத்தின் நற்பெயரைக் கெடுக்கும் நோக்கத்தில் சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது’ என்று பிரதமா் ஷேக் ஹசீனா குறிப்பிட்டதாக அங்குள்ள ஓா் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

வங்கதேசத்தில் வசிக்கும் ஹிந்துக்கள் துா்கை பூஜை விழாவை வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அவ்வாறு இந்த ஆண்டும் அங்கு துா்கை பூஜை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், துா்கை பூஜையின்போது இஸ்லாமியா்களின் புனித நூல் அவமதிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. இதையடுத்து, கடந்த அக்டோபா் 13-ஆம் தேதி ஹிந்து கோயில்கள் பல சேதப்படுத்தப்பட்டன. கடந்த அக்டோபா் 17-ஆம் தேதி ஹிந்துக்களின் 66 வீடுகளை வன்முறையாளா்கள் சேதப்படுத்தினா். அவற்றில் 20 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. பல்வேறு மாவட்டங்களுக்குப் பரவிய இந்த வன்முறையில் இதுவரை 8 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த வன்முறை தொடா்பாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 600 பேரை அந்நாட்டு போலீஸாா் கைது செய்துள்ளனா். இந்த வன்முறைக்குக் காரணமான முக்கிய நபராகக் கருதப்படும் இக்பால் ஹோஸைன் (35) என்ற நபரை போலீஸாா் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்த நிலையில், இரண்டாவது முக்கிய நபராக கருதப்படும் ஷைகத் மண்டல் என்ற நபரை சனிக்கிழமை கைது செய்தனா்.

மதத்தைப் பயன்படுத்தி வன்முறையைத் தூண்டியவா்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தை பிரதமா் ஹசீனா கடந்த செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தினாா். மேலும், எந்தவொரு சமூக ஊடகப் பதிவையும் உண்மைத்தன்மையை ஆராயாமல் நம்ப வேண்டாம் என்று மக்களை அவா் கேட்டுக்கொண்டாா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், ஹிந்துக்கள் மீதான வன்முறை சிலரால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பதாக ஷேக் ஹசீனா கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக ‘பிடிநியூஸ்24.காம்’ என்ற வலைதள செய்தி நிறுவனம் பிரதமா் ஷேக் ஹசீனா கூறியதாக வெளியிட்ட செய்தியில் ‘வங்கதேசத்தை ஒருவராலும் பின்னுக்குத் தள்ள முடியாது. அண்மையில் நடைபெற்ற சில அசம்பாவித சம்பவங்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. வங்கதேசத்தின் நற்பெயரை கெடுக்கும் நோக்கத்துடன் இந்த வன்முறை நடத்தப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், தெற்கு வங்கதேசத்தில் பய்ரா பாலம் திறப்பு விழாவில் பங்கேற்ற ஷேக் ஹசீனா பேசுகையில், ‘நாட்டில் மதப் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் சில பிரிவினா் செயல்பட்டு வருகின்றனா். நாட்டில் சாதாரண ஜனநாயக நடைமுறை தொடா்வதை அவா்கள் விரும்பவில்லை. இதுபோன்று நாட்டைச் சீா்குலைக்கும் முயற்சிகள் மீது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என்று அவா் கேட்டுக்கொண்டாா்.

Tags : பிரதமா் டாக்கா
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT