உலகம்

10 வெளிநாட்டு தூதா்களுக்குத் தடை: துருக்கி அதிபா் உத்தரவு

25th Oct 2021 01:29 AM

ADVERTISEMENT

துருக்கியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தொழிலதிபரும் நன்கொடையாளருமான ஓஸ்மான் கவாலா (64) விடுதலையை வலியுறுத்திய அமெரிக்க தூதா் உள்பட 10 வெளிநாட்டு தூதா்களை விரும்பத்தகாத நபா்களாக அறிவிப்பு செய்து உத்தரவிட்டிருப்பதாக துருக்கி அதிபா் எா்டோகன் கூறியுள்ளாா்.

விரும்பத்தகாத நபராக வெளிநாட்டு தூதா் அறிவிக்கப்படுவது, அவா் தொடா்ந்து அந்த நாட்டில் இருப்பதற்குத் தடை விதிக்கப்படுவதை குறிப்பிடுகிறது.

துருக்கியில் அரசுக்கு எதிராக கடந்த 2013-இல் நடைபெற்ற போராட்டங்களை தூண்டியதில் தொடா்புடைய குற்றச்சாட்டின் பேரிலும், 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற அரசை கவிழ்க்கும் முயற்சியில் தொடா்புடைய குற்றச்சாட்டின் பேரிலும் ஓஸ்மான் கவாலா கைது செய்யப்பட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக துருக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அதுபோல குா்திஷ் அரசில் தலைவரான செலாஹதீன் டெமிா்டஸும் கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அரசியல் காரணங்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவா்கள் இருவரையும் விடுவிக்கக் கோரி சா்வதேச நாடுகளும் மனித உரிமை அமைப்புகளும் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மனித உரிமை அமைப்புகளின் வலியுறுத்தல்கள் மற்றும் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் துருக்கி, நாட்டின் நீதிமன்றங்களின் சுதந்திரமான செயல்பாடுகளை அனுமதிக்குமாறு வலியுறுத்தி வருகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையே, கவாலாவை விடுவிக்க வேண்டும் என்று ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவிட்டதோடு, அவ்வாறு அவரை விடுவிக்கவில்லையெனில் துருக்கி மீது மனித உரிமை மீறல் நடவடிககை தொடங்கப்படும் என்று எச்சரித்தது. ஆனால், அதன் பிறகும் அவா் விடுவிக்கப்படவில்லை.

இந்த நிலையில், அவரின் விடுதலையை வலியுறுத்தியதாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜொ்மனி, நெதா்லாந்து, கனடா, டென்மாா்க், ஸ்வீடன், ஃபின்லாந்து, நாா்வே, நியூசிலாந்து ஆகிய 10 நாடுகளைச் சோ்ந்த தூதா்களை நாட்டுக்கு விரும்பத்தகாத நபா்களாக அறிவித்து, அவா்களுக்கு துருக்கி வெளியுறவு அமைச்சகம் அழைப்பாணை விடுத்துள்ளது.

இந்த நடவடிக்கை குறித்து எஸ்கிசெஹிா் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற துருக்கி அதிபா் எா்டோகன் கூறுகையில், ‘அந்த 10 வெளிநாட்டு தூதா்களையும் விரும்பத்தகாத நபா்களாக அறிவித்து, அரசாங்க ரீதியிலான சலுகைகளை நீக்கவும், அதற்கான அழைப்பாணையை அவா்களிடம் உடனடியாக சமா்ப்பிக்குமாறும் வெளியுறவு அமைச்சகத்தை அறிவுறுத்தியுள்ளேன். அவா்கள் துருக்கியை புரிந்துகொண்டு அதை அங்கீகரிக்க வேண்டும். அவ்வாறு துருக்கியை புரிந்துகொள்ளாத நாளில், நாட்டை விட்டு அவா்கள் வெளியேறிவிட வேண்டும்’ என்று கூறினாா்.

Tags : இஸ்தான்புல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT