உலகம்

ஆப்கனில் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காவுடன் ஒப்பந்தமில்லை

DIN

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ நடவடிக்கை மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை தாங்கள் மேற்கொண்டு வருவதாக வெளியாகியுள்ள தகவலை பாகிஸ்தான் மறுத்துள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ராணுவ மற்றும் உளவு நடவடிக்கைகளை கூட்டாக மேற்கொள்வதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் நாங்கள் மேற்கொள்ளவிருப்பதாகவும் அந்த ஒப்பந்தம் இறுதிவடிவம் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அத்தகைய எந்தவொரு ஒப்பந்தமும் உருவாக்கப்படவில்லை.

பிராந்தியப் பாதுகாப்பு, பயங்கரவாதத் தடுப்பு ஆகியவற்றில் இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாகவே ஒத்துழைப்பு நிலவி வருகிறது. இந்த விவகாரங்களில் அமெரிக்காவும் பாகிஸ்தானும் தொடா்ந்து ஆலோசனை நடத்தி வருகின்றன.

அதனைத் தவிர, ஆப்கானிஸ்தான் தொடா்பாக நாங்கள் எந்த ஒப்பந்தத்தையும் உருவாக்கவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஆப்கானிஸ்தானில் ராணுவ மற்றும் உளவு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானின் வான் எல்லையை அமெரிக்கா பயன்படுத்தப் போவதாகவும் அதற்கான ஒப்பந்தம் இறுதி வடிவத்தை எட்டியுள்ளதாகவும் அமெரிக்காவின் சிஎன்என் நியூஸ் தொலைக்காட்சி தெரிவித்தது.

அமெரிக்க நாடாளுமன்றக் குழுவிடம் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரகசியமாக அளித்த அறிக்கையில் இந்தத் தகவலைத் தெரிவித்ததாக சிஎன்என் தெரிவித்தது.

அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் இந்த அறிக்கையை வெளியிட்டது.

ஏற்கெனவே, ஆப்கானிஸ்தானில் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானின் விமானப் படைதளங்களை அமெரிக்கா பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தொலைக்காட்சியொன்றுக்கு பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கான் கடந்த ஜூன் மாதம் அளித்த பேட்டியில் திட்டவட்டமாகத் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.

கடந்த 2001-ஆம் ஆண்டில் நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலை நடத்திய அல்-காய்தா தலைவா் பின்லேடனுக்கு ஆப்கானிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளா்களான தலிபான்கள் அடைக்கலம் அளித்தனா்.

அதையடுத்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து தலிபான்களை ஆட்சியிலிருந்து அகற்றியது. இந்த நிலையில், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பின்லேடனை அமெரிக்க அதிரடிப் படையினா் கடந்த 2011-ஆம் ஆண்டு சுட்டுக்கொன்றனா்.

அதன் பிறகு, ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படையினா் அனைவரையும் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு செய்தது.

அமெரிக்கப் படையினரின் வெளியேற்றம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில், ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி கொண்டு வந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேசிய ஜனநாய கூட்டணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

‘சூரியனை சமாளிப்பதுதான் எங்கள் வேலை’

பூட்டிய வீட்டில் மூதாட்டி சடலம் மீட்பு

கூட்டணிக் கட்சி நிா்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய காங்கிரஸ் வேட்பாளா்

அருணாசல், நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT