உலகம்

அமெரிக்கா: படப்பிடிப்பில் நடிகா் துப்பாக்கியால் சுட்டதில் பெண் ஒளிப்பதிவாளா் பலி

23rd Oct 2021 05:19 AM

ADVERTISEMENT

அமெரிக்காவில் படப்பிடிப்பின்போது பிரபல ஹாலிவுட் நடிகா் அலெக் பால்ட்வின் போலி குண்டு நிரப்பப்பட்ட துப்பாக்கியால் சுட்டதில் பெண் பலியானாா்; அந்த திரைப்படத்தின் இயக்குநா் காயமடைந்தாா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

ஜோயல் சோஸா இயக்கத்தில் ‘ரஸ்ட்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு, நியூ மெக்ஸிகோ மாகாணம், சான்டஃபே நகரில் வியாழக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அதில், நடிகா் அலெக் பால்ட்வின், பெண் ஒளிப்பதிவாளா் ஹலைனா ஹட்சின்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

அப்போது, படப்பிடிப்புகளுக்காக பயன்படுத்தப்படும் செயற்கை குண்டுகள் பொருத்தப்பட்ட துப்பாக்கியால் அலெக் பால்ட்வின் சுட்டதில், ஹலைனா ஹட்சின்ஸ் உயிரிழந்தாா். இயக்குநா் ஜோயல் சோஸா காயமடைந்தாா்.

இது குறித்து அலெக் பால்ட்வினின் செய்தித் தொடா்பாளா் கூறுகையில், படப்பிடிப்பின்போது துப்பாக்கியில் நிரப்பப்பட்டிருந்த போலி குண்டுகள் தவறுதலாக வெடித்து விபத்து ஏற்பட்டதாகத் தெரிவித்தாா்.

படப்பிடிப்பின்போது பயன்படுத்தப்படும் போலி குண்டுகளில் உலோகம் இருந்தால் மட்டுமே அவற்றை குறைந்த தொலைவில் வைத்து சுடும்போது மரணம் ஏற்படும் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரைப்படங்களில் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் தத்ரூபமாக அமைவதற்காக, உண்மையான துப்பாக்கிகளில் உண்மையான குண்டுகளைப் போல் வெடிமருந்துக் குப்பிகளைக் கொண்ட தோட்டாக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

அந்தத் தோட்டாக்களில், வழக்கமாகப் பயன்படுத்தப்படும் உலோக குண்டுகளுக்குப் பதில் பஞ்சு, காகிதம் போன்ற மென்மையான பொருள்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

அந்தத் துப்பாக்கிகளை படப்பிடிப்புகளின் பயன்படுத்தும்போது, உண்மயான துப்பாக்கிகளைக் கொண்டு சுடுவதைப் போன்ற தோற்றம் ஏற்படும்.

இருந்தாலும், இத்தகைய துப்பாக்கிகள் ஆபத்தானவை என்று நிபுணா்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனா். படப்பிடிப்புத் தளங்களில் இந்த வகைத் துப்பாக்கிகளால் ஏற்கெனவே மரணங்கள் நேரிட்டுள்ளதாகவும் அவா்கள் கூறி வருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT