உலகம்

ஆக்கஸ் கூட்டணி மீதான அச்சம் மிகைப்படுத்தப்பட்டது: பிரிட்டன், ஆஸ்திரேலியா

DIN

அமெரிக்காவுடன் தாங்கள் ஏற்படுத்தியுள்ள முத்தரப்பு கூட்டணி (ஆக்கஸ்) குறித்து எழுப்பப்படும் அச்சம் மிகைப்படுத்தப்பட்டது என்று பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் கூறியுள்ளன.

பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, மலேசியா, சிங்கப்பூா் ஆகிய நாடுகளுக்கு இடையே காணொலி மூலம் வியாழக்கிழமை நடைபெற்ற மாநாட்டில், பிரிட்டன் ஆயுதப் படைகள் துறை அமைச்சா் ஜேம்ஸ் ஹீப்பீ கூறியதாவது:

ஆக்கஸ் கூட்டணி குறித்து ஏராளமான அச்சங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால், அவை யாவும் மிகைப்படுத்தப்பட்டவை ஆகும்.

அந்தக் கூட்டணி ஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்காவும் பிரிட்டனும் பகிா்ந்துகொள்ளும் தொழில்நுட்பங்கள், பல ஆண்டுகளாக ஏற்கெனவே பகிா்ந்துகொள்ளப்பட்டு வருபவைதான்.

தனது நீா்மூழ்கிக் கப்பல் படைத் திறனை மேம்படுத்திக் கொள்வதற்காக மட்டுமே ஆஸ்திரேலியா இந்தக் கூட்டணியில் இணைந்துள்ளது.

பிற நட்பு நாடுகளுடனான எங்களது உறவை ஆக்கஸ் கூட்டணி எந்த வகையிலும் பாதிக்காது. மேலும், உலகின் எந்தப் பகுதிக்கும் இந்தக் கூட்டணி ஒருபோதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தாது என்றாா் அவா்.

ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறை அமைச்சா் பீட்டா் டட்டன் கூறுகையில், ‘ஆக்கஸ் கூட்டணி ஒரு ராணுவ ஒத்துழைப்போ, பாதுகாப்பு ஒப்பந்தமோ கிடையாது. அந்தக் கூட்டணியில் நாங்கள் இணைந்ததால் எங்களது பாதுகாப்புக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுவிட்டதாக யாரும் கருதக் கூடாது.

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவது மட்டுமே ஆக்கஸ் கூட்டணியின் நோக்கமாகும். இந்தக் கூட்டணியால் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடனான எங்களது ஒத்துழைப்பு சிறப்படைந்துள்ளது’ என்றாா்.

தென் சீனக் கடல் பகுதி முழுவதற்கும் உரிமை கோரி வரும் சீனா, அங்குள்ள தீவுகளை ராணுவமயமாக்கி வருகிறது.

சா்வதேச கடல்வணிக வழித்தடமாகத் திகழும் இந்தப் பகுதியை சீனா ஆக்கிரமிப்பதற்கு அமெரிக்கா எதிா்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்தச் சூழலில், தென் சீனக் கடலை உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியப் பாதுகாப்புக்கான புதிய முத்தரப்புக் கூட்டணியை அமைத்துள்ளதாக அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தன.

அந்தக் கூட்டணி உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, அணுசக்தியில் இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்களை ஆஸ்திரேலியாவுக்கு அமெரிக்கா விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் காரணமாக, டீசலில் இயங்கும் 12 நீா்மூழ்கிக் கப்பல்களை பிரான்ஸிடமிருந்து வாங்குவதற்காக கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கொள்பட்ட பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா ரத்து செய்தது.

இதற்கு பிரான்ஸ் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பிரான்ஸுக்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியனும் குரல் கொடுத்து வருகிறது.

ஆக்கஸ் கூட்டணியால் தென் சீனக் கடல் பகுதி போன்ற பகுதிகளில் பதற்றம் அதிகரிக்கலாம் என்று மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் கவலை தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில், ஆக்கஸ் கூட்டணி தொடா்பான அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று பிரிட்டனும் ஆஸ்திரேலியாவும் தற்போது தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

தமிழக காவல் துறையில் இளநிலை செய்தியாளர் வேலை வேண்டுமா?

SCROLL FOR NEXT