உலகம்

ஈரானில் அடக்குமுறை; முகத்தை மூடும்படியான ஆடை அணியாத பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

21st Oct 2021 01:07 PM

ADVERTISEMENT

மற்ற இஸ்லாமிய நாடுகளை போன்றே, ஈரான் நாட்டிலும் சில பிற்போக்குதனமான விதிகள் பின்பற்றப்பட்டுவருகிறது. அதன்படி, முகத்தை மூடும்படியான உடையை அணிய வேண்டும் என்பது அங்கு விதியாக உள்ளது. அப்படி உடை அணியாத பெண்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்படுவது வழக்கம்.

இவற்றைக் கண்காணிக்கவே அங்கு கலாசார காவலர்கள் என்ற தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய கலாசாரம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதே இவர்களது பணி.

இந்நிலையில், பொதுவெளியில் முகத்தை மூடும்படியான உடையை அணியாத பெண் ஒருவரை நாயைப் பிடிக்கும் கருவியைக் கொண்டு கலாசார காவலர்கள் கைது செய்யும் விடியோ தற்போது வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் சரியாக எந்த இடத்தில் இந்த சம்பவம் நடந்தது எனத் தெளிவாகத் தெரியவில்லை. 

கடந்த வாரம் நடந்தாகக் கூறப்படும் இந்த சம்பவத்தின் விடியோவை ஈரான் நாட்டின் பெண் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மாசிஹ் அலினேஜாத் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். 

ADVERTISEMENT

அதில், பெண் ஒருவரை 3 பேர் சேர்ந்து கொண்டு கைது செய்ய முயல்கின்றனர். அப்போது, முழுவதுமாக புர்கா உடை அணிந்த பெண் கலாசார காவலர் ஒருவர், அந்த பெண்ணின் முடியைப் பிடித்து இழுக்கிறார். 

மற்றொரு ஆண் அவரது வலது கையை பிடித்து இழுத்துத் தூக்குகிறார். அப்போது காவல்துறையினர் வண்டியில் இருக்கும் மற்றொரு நபர் நாய்களைப் பிடிக்கும் கருவியைக் கொண்டு அந்த பெண்ணை பிடித்து உள்ளே இழுத்துப் போடுகிறார். இந்த சம்வபத்திற்கு ட்விட்டரில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

ஆனால், இந்த குற்றச்சாட்டை ஈரான் காவல்துறையினர் முழுமையாக மறுத்துள்ளனர். விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அந்த பெண்ணை கைது செய்ய முயன்றதாகக் குறிப்பிட்ட ஈரான் காவல்துறையினர், அப்போது அந்த பெண் போலீசாரிடம் அத்துமீறி ஆவேசமாக நடந்து கொண்டாலேயே சில கடுமையான முறைகளைப் பயன்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டதாக விளக்கம் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்த காவல்துறையினர், அந்தப் பெண்ணுக்கு இதனால் காயம் எதாவது ஏற்பட்டதா என்பது குறித்த தகவலைக் கூற மறுத்துவிட்டனர்.

 


 

 

Tags : Iran
ADVERTISEMENT
ADVERTISEMENT