உலகம்

வங்கதேசத்தில் கோயில்கள் மீது தாக்குதல்: 5 பேர் பலி, பலர் காயம்

DIN

வங்கதேசத்தில் துர்கா பூஜை நடைபெற்ற இடங்களில் அடையாளம் தெரியாத முஸ்லிம்கள் புகுந்து சுவாமி சிலைகளைச் சேதப்படுத்தியும் பல இடங்களில் ஹிந்து கோயில்களைச் சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி சிறுபான்மையினர் அமைப்பினர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
 வங்கதேசத்தில் துர்கா பூஜை அக்.11-ஆம் தேதி பல்வேறு இடங்களில் தொடங்கியது. கடந்த புதன்கிழமை தலைநகர் டாக்காவிலிருந்து 100 கி.மீட்டர் தொலைவில் உள்ள குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை நடைபெற்றது. அப்போது அடையாளம் தெரியாத முஸ்லிம்கள் சிலர் புகுந்து சுவாமி சிலைகளைச் சேதப்படுத்தினர். இதைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. சிறுபான்மையினரான ஹிந்து கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. ஹிந்துக்கள் நடத்தி வரும் கடைகளும் சேதப்படுத்தப்பட்டன.
 அதன் தொடர்ச்சியாக சனிக்கிழமை பெனி நகரில் ஹிந்துக்களுக்குச் சொந்தமான கோயில்கள், கடைகள் சேதப்படுத்தப்பட்டன. மாலை 4.30 முதல் நள்ளிரவு வரை வன்முறை நீடித்தது. கலவரத்தின்போது பென் மாடல் காவல் நிலைய ஆய்வாளர் உள்பட 40 பேர் காயமடைந்தனர். பல கோயில்களும், துர்கா பூஜை நடைபெற்ற இடங்களில் சுவாமி சிலைகளும் சேதப்படுத்தப்பட்டன. முன்ஷிகஞ்ச் எனும் இடத்தில் தானியாபாரா மகா சோஷன் காளி கோயிலில் இருந்த 6 சிலைகளும் சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து சம்பவ இடங்களுக்கு கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டனர். துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.
 பல்வேறு அமைப்புகள் கண்டனம்: சிறுபான்மையினருக்கான எதிரான இந்த வன்முறை சம்பவத்துக்கு வங்கதேசத்தைச் சேர்ந்த ஹிந்து, பெளத்த, கிறிஸ்தவ ஐக்கிய குழு கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ராணா தாஸ்குப்தா கூறுகையில், சிறுபான்மையினருக்கு எதிரான இவ்வன்முறைக்குக் கண்டனம் தெரிவித்து வரும் 23-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
 மேலும் மத மோதல்களுக்கு "வங்கதேச பூஜா உத்ஜாபன் பரிஷத்' அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பின் தலைவர் மிலன் காந்தி தத்தா கூறுகையில், இந்த வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும். அரசு தங்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் அடுத்த கட்ட போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றார்.
 இச்சம்பவத்துக்கு டாக்கா பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழுவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்நாட்டின் தகவல் மற்றும் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஹசன் முகமது கூறுகையில், இச்சம்பவத்தை எதிர்க்கட்சியான வங்கதேச தேசியவாத கட்சி (பி.என்.பி.) தூண்டிவிட்டுள்ளது. பிரதமர் ஷேக் ஹசீனாவை பிஎன்பி- ஜமாத் அமைப்பு அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் இதுபோன்ற சதிச் செயலில் ஈடுபட்டுள்ளது. குமில்லாவில் நடத்தப்பட்ட மத மோதல் அரசியல் காரணங்களுக்காக நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து பல இடங்கள் மத மோதல் சம்பவங்கள் நிகழ்ந்தன. கோயில்களைச் சேதப்படுத்தியவர்கள், காவல் துறையினரைத் தாக்கியவர்கள் சிசிடிவி மூலம் கண்டறியப்பட்டுள்ளனர் என்றார் அவர்.
 ஹிந்துக்களுக்கு எதிரான கலவர சம்பவத்தைத் தொடர்ந்து நாட்டின் 64 மாவட்டங்களில் 34 மாவட்டங்களுக்கு துணை ராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 முன்னதாக, புதன்கிழமையும் வியாழக்கிழமையும் முஸ்லிம்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
 பிரதமர் ஷேக் ஹசீனா உறுதி
 குமில்லாவில் நிகழ்ந்த சம்பவம் முழுமையாக விசாரிக்கப்பட்டுள்ளது. எந்தக் குற்றவாளியும் தப்பிக்க முடியாது. சம்பவத்தில் தொடர்புடைய நபர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார் என்று பிரதமர் ஷேக் ஹசீனா வியாழக்கிழமை டாக்காவில் உள்ள டாக்கேஸ்வரி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது ஹிந்து அமைப்பினரிடம் உறுதி அளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT