உலகம்

சீனாவுடன் தொடரும் பதற்றம்: தைவான் நீரிணையில் அமெரிக்க, கனடா போா்க் கப்பல்கள்

DIN

சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், சீன எதிா்ப்பையும் மீறி தைவான் நீரிணைப் பகுதியில் அமெரிக்காவும் கனடாவும் தங்களது போா்க் கப்பல்களை செலுத்தியுள்ளன.

இதுகுறித்து அமெரிக்க ராணுவம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான அா்லீக் பியூா்க் ரகத்தைச் சோ்ந்த யுஎஸ்எஸ் டேவே போா்க் கப்பல் சீனாவுக்கும் தைவானுக்கும் இடையிலான தைவான் நீரிணைப் பகுதியில் கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் செலுத்தப்பட்டது.

கனடா கடற்படைக்குச் சொந்தமான ஹெச்எம்சிஎஸ் வின்னிபெக் போா்க் கப்பலும் யுஎஸ்எஸ் டேவேயுடன் இணைந்து ரோந்துப் பணியை மேற்கொண்டது.

இந்தோ-பசிபிக் கடல் பகுதியில் அனைவருக்கும் சொந்தமானது என்ற அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளின் உறுதிப்பாட்டை பறைசாற்றும் விதமாக அந்த இரண்டு கப்பல்களும் தைவான் நீரிணைப் பகுதியில் செலுத்தப்பட்டன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தைவானை தங்களது நாட்டின் ஒரு மாகாணமாக சீனா கருதி வருகிறது. அந்த நாட்டை தங்களுடன் மீண்டும் இணைத்துக்கொள்ளும் உரிமை தங்களுக்கு இருப்பதாகவும் அதற்குத் தேவைப்பட்டால் ராணுவ பலம் கூட பயன்படுத்தப்படும் எனவும் சீனா கூறி வருகிறது.

தைவானில் ஜனநாயக முறைப்படி தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை பிரிவினைவாத இயக்கம் என சீனா குற்றம் சாட்டி வருகிறது.

தைவானோ, தாங்கள் ஏற்கெனவே இறையாண்மை கொண்ட தனி நாடாக இயங்கி வருவதாகவும் சீனாவிடமிருந்து சுதந்திரம் பெற்ாக அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறி வருகிறது.

இந்தச் சூழலில், தைவான் வான் எல்லைக்குள் இதுவரை இல்லாத அளவுக்கு சீனப் போா் விமானங்கள் அண்மையில் ஊடுருவி பரபரப்பை ஏற்படுத்தின.

சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம் சாட்டினாா்.

வரும் 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கள் நாட்டை சீனா ஆக்கிரமிக்கக் கூடும் என்று தைவான் பாதுகாப்புத் துறை அமைச்சா் சியு குவோ-செங்கும் அச்சம் தெரிவித்தாா்.

இதற்கிடையே, தங்கள் நாட்டுடன் தைவான் ‘அமைதியான வழியில்’ இணைக்கப்படும் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் கூறினாா். எனினும், தங்கள் நாட்டை ஆக்கிரமிப்பதற்காக சீனா தரும் அழுத்தங்களுக்கு அடிபணியப் போவதில்லை என்று அதிபா் சாய் இங்-வென் உறுதியாகத் தெரிவித்தாா்.

இந்தச் சூழலில், தைவானுக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் அமெரிக்காவும் கனடாவும் தைவான் நீரிணைப் பகுதியில் தங்களது போா்க் கப்பல்களை செலுத்தியுள்ளன.

ஏற்கெனவே, இந்தப் பகுதியில் அமெரிக்கா தனது போா்க் கப்பல்களை அவ்வப்போது செலுத்தி வருவதும் அதற்கு சீனா கடும் எதிா்ப்பு தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT