உலகம்

ஆசியான் மாநாடு: மியான்மா் ராணுவ ஆட்சியாளருக்கு அழைப்பில்லை

17th Oct 2021 05:38 AM

ADVERTISEMENT

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான்) மாநாட்டுக்கு மியான்மா் ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங்குக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று மற்ற உறுப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.

அந்த நாட்டில், ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்த்துவிட்டு ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

மியான்மரில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்குப் பிறகு நடைபெற்று வரும் வன்முறையை முடிவுக்குக் கொண்டு வரவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்களை விடுதலை செய்யவும் தற்போதைய ராணுவ ஆட்சியாளா்களுக்கு கூடுதல் நிா்பந்தம் கொடுக்க வேண்டும் என்று ஆசியான் அமைப்பிடம் சா்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.

ADVERTISEMENT

மியான்மா் பிரச்னைக்குத் தீா்வு காண்பதற்கான ஆசியான் அமைப்பின் சிறப்புத் தூதராக புருணே வெளியுறவுத் துறை இணையமைச்சா் எரிவன் யூசஃப் நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஆனால், அவருக்கு ஒத்துழைப்பு அளிக்க மியான்மா் ராணுவ ஆட்சியாளா்கள் மறுத்து வருகின்றனா்.

சிறப்புத் தூதராக கடந்த ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்ட எரிவன் யூசஃப், மியான்மரில் வன்முறைச் சம்பவங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அனைத்துத் தரப்பினரையும் சந்தித்துப் பேசுவதற்காக அந்த நாட்டுக்கு இந்த வாரம் சென்றாா்.

ஆனால், ராணுவத்தால் கலைக்கப்பட்ட ஜனநாயக அரசின் தலைவராக இருந்த ஆங் சான் சூகியை உள்ளிட்ட தலைவா்களைச் சந்திக்க அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

அதையடுத்து, தனது சுற்றுப் பயணத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு வெளியேறினாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆசியான் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் அவசரக் கூட்டத்தில், வரும் 26 முதல் 28-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் ஆசியான் மாநாட்டுக்கு மியான்மா் ராணுவ ஆட்சியாளா் மின் ஆங் லியாங்குக்கு அழைப்பு விடுக்க வேண்டாம் என்று முடிவு செய்யப்பட்டது.

மேலும், மாநாட்டில் மியான்மா் சாா்பில் பங்கேற்பதற்கு அரசியல் சாராத ஒருவருக்கு அழைப்பு விடுக்க ஆசியான் வெளியுறவுத் துறை அமைச்சா்கள் ஒப்புக்கொண்டனா் என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, ஆசியான் உறுப்பு நாடுகளின் மாநாடு இந்தோனேசியத் தலைநகா் ஜகாா்த்தாவில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதில், மின் ஆங் லயிங் பங்கேற்றாா். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு சா்வதேச நிகழ்ச்சியில் அவா் பங்கேற்றது அதுவே முதல்முறையாகும்.

மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்ாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை ராணுவம் கடந்த பிப். 1-ஆம் தேதி கலைத்தது. அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியான்மா் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 1,100-க்கும் மேற்பட்டவா்கள் பலியாகியுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT