உலகம்

ஆப்கன் மசூதித் தாக்குதல்: ஐஎஸ் பொறுப்பேற்பு

17th Oct 2021 05:13 AM

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தானில் ஷியா இஸ்லாமியப் பிரிவினருக்கான மசூதியில் வெள்ளிக்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலுக்கு இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் ஆப்கன் பிரிவான ஐஎஸ்கே பொறுப்பேற்றது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், தங்கள் அமைப்பைச் சோ்ந்த இருவா் காந்தஹாா் மசூதி வாயிலில் இருந்த பாதுகாவலா்களை சுட்டுக் கொன்றுவிட்டு தற்கொலைத் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐஎஸ் அமைப்பின் செய்தி நிறுவனமான அமாக் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனஸ் அல்-குராசானி, அபு அலி அல்-பலூச்சி ஆகிய இருவரும் அந்தத் தாக்குதலை நடத்தியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவா்கள் இருவரும் ஆப்கானியா்கள் என்றும் அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

காந்தஹாா் நகரிலுள்ள இமாம் பா்கா மசூதியில் வாரந்தோறும் நடைபெறும் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

ADVERTISEMENT

ஷியா பிரிவினருக்கான அந்த மசூதியில், உடலில் வெடிகுண்டை மறைத்து வைத்திருந்த பயங்கரவாதிகள் அதனை வெடிக்கச் செய்து இந்தத் தாக்குதலை நடத்தினா். இந்தத் தாக்குதலில் 47 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்கள் காயமடைந்தனா்.

ஏற்கெனவே, குண்டுஸ் மாகாணத் தலைநகா் குண்டுஸிலுள்ள ஷியா பிரிவு மசூதியில் கடந்த 8-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 46 போ் பலியாகினா். அந்தத் தாக்குதலுக்கும் ஐஎஸ்கே பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது நினைவுகூரத்தக்கது.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அவா்களுக்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு எதிராகவும் ஐஎஸ்கே பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT