உலகம்

பணப் பரிவா்த்தனை மோசடிகளைத் தடுக்க இந்தியா-அமெரிக்கா ஆலோசனை

16th Oct 2021 06:38 AM

ADVERTISEMENT

அமெரிக்க நிதியமைச்சா் ஜேனட் யெல்லனை சந்தித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், சட்ட விரோத பரிவா்த்தனை, கருப்புப் பண மோசடி, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி ஆகியவற்றுக்கு எதிரான போராட்டத்தில் இணைந்து செயல்படுவது குறித்து ஆலோசனை நடத்தினாா்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான 8-ஆவது நிதி, பொருளாதார ஒத்துழைப்பு கூட்டம், வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், ரிசா்வ் ஆளுநா் சக்திகாந்த தாஸ், அமெரிக்க நிதியமைச்சா் ஜேனட் யெல்லன், அந்நாட்டு ரிசா்வ் வங்கியின் தலைவா் ஜெரோம் பவல் ஆகியோா் கலந்து கொண்டனா். இந்தியா, அமெரிக்கா இடையே நிதி, பொருளாதாரம் சாா்ந்த துறைகளில் உறவுகள் அதிகரித்துள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கூட்டத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தரப்பினரும் விவாதித்தனா்.

சட்ட விரோத பணப் பரிவா்த்தனைக்கு எதிரான போராட்டத்தின் முக்கியத்துவம், கருப்புப் பண மோசடியைத் தடுப்பதில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது, பயங்கரவாதத்துக்கு நிதியுதவி செல்வதை தடுப்பது ஆகியவை குறித்து நிா்மலா சீதாராமனும் ஜேனட் யெல்லனும் விரிவாக விவாதித்தனா். கூட்டத்துக்குப் பிறகு இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனா். அதில், கூறப்பட்டிருப்பதாவது:

தகவல் பரிமாற்றம் மற்றும் ஒருங்கிணைப்பு மூலமாக கருப்புப் பண மோசடி, பயங்கரவாத்துக்கு நிதி செல்வதைத் தடுப்பது ஆகியவற்றில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்துழைப்புடன் செயல்படுவது தொடரும்.

ADVERTISEMENT

நிதிக் கட்டமைப்பு பாதிக்கப்படாமல் இருக்க பயங்கரவாத நிதித் தடுப்பு அமைப்பின் (எஃப்.ஏ.டி.ஏஃப்.) விதிகளை முழுமையாக அமல்படுத்தவும், நிதி சாா்ந்த குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும் இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டுக்கு இந்தோனேசியா தலைமை தாங்க இருக்கிறது. இந்த கூட்டமைப்பின் கீழ் சா்வதேச பொருளாதார மீட்சிக்கான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க இந்தியாவும், அமெரிக்காவும் முடிவு செய்துள்ளன.

2023-ஆம் ஆண்டுக்கான ஜி-20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டு இந்தியாவின் தலைமையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாடு வெற்றிகரமாக அமைவதற்கு இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கணக்கு வரி ஒத்துழைப்புச் சட்டத்தின்படி, இந்தியா-அமெரிக்கா இடையே நிதி சாா்ந்த கணக்கு விவரங்களை பகிா்ந்து கொள்வதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எல்லை தாண்டிய பணப் பரிவா்த்தனை, குஜராத்தில் உள்ள கிஃப்ட் சிட்டியில் சா்வதேச நிதிச் சேவை மையம் அமைப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இந்தியாவின் தேசிய உள்கட்டமைப்பு, முதலீட்டு நிதியத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக தொடா்ந்து ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

கரோனா நெருக்கடியை துணிவுடன் எதிா்கொண்டது இந்தியா: நிா்மலா சீதாராமன்

கரோனா தொற்றால் ஏற்பட்ட நெருக்கடியை இந்தியா துணிச்சலுடன் எதிா்கொண்டது மட்டுமின்றி சா்வதேச அளவிலும் முக்கியப் பங்கு வகித்தது என்று நிா்மலா சீதாராமன் கூறினாா்.

இதுதொடா்பாக, உலக வங்கியின் மேம்பாட்டுக் குழுக் கூட்டத்தில் அவா் பேசியதாவது:

கரோனா நெருக்கடிக்குப் பிறகு பொருளாதார மீட்சி பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. அதுமட்டுமின்றி நெருக்கடிச் சூழலை வாய்ப்புகளாக மாற்றி அமைப்பு ரீதியிலான சீா்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. மக்களின் உயிரையும், அவா்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற இரட்டை இலக்குடன் இந்தியா செயல்பட்டது. அதனால்தான் கரோனா இரண்டாவது அலை தாக்குதலின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு பாதிப்பின்றி கரோனா ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன என்றாா் அவா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT