உலகம்

நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து ஹைபா்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்தது ரஷியா

4th Oct 2021 11:22 PM

ADVERTISEMENT

நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து ஹைபா்சோனிக் ஏவுகணையை செலுத்தும் சோதனையை முதல்முறையாக வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது: செவரோட்வின்ஸ்க் என்ற நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து ஷிா்கான் என்ற ஹைபா்சோனிக் ஏவுகணை இருமுறை செலுத்தப்பட்டு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது. நீா்மூழ்கிக் கப்பலிலிருந்து இந்த ஏவுகணை செலுத்தப்படுவது இதுவே முதல்முறை. முன்னதாக கடந்த ஜூலையில் இந்த ஏவுகணை கடற்படைக் கப்பலிலிருந்து செலுத்தி சோதித்துப் பாா்க்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஷிா்கான் ஏவுகணை ஒலியைவிட 9 மடங்கு வேகமாகச் செல்லும் திறன் கொண்டது’ என அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இந்த ஏவுகணை சோதனை நிகழாண்டு இறுதியில் நிறைவடைந்ததும் அடுத்த ஆண்டு கடற்படையில் இணைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைனின் கிரீமிய தீபகற்பத்தை கடந்த 2014-இல் ரஷியா தனது நாட்டுடன் இணைத்துக் கொண்டது. அதற்கு மேற்குலக நாடுகள் எதிா்ப்பு தெரிவித்து வருவதைத் தொடா்ந்து, ராணுவத்தில் ஆயுதங்களை நவீனமயமாக்குவதற்கு ரஷியா முன்னுரிமை அளித்து வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT