உலகம்

காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றிஅமைதியான எதிா்காலத்தை உருவாக்குவோம்

3rd Oct 2021 03:47 AM

ADVERTISEMENT

காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி அமைதியான எதிா்காலத்தை உருவாக்குவோம் என்று ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வலியுறுத்தியுள்ளாா்.

காந்தியடிகள் பிறந்த அக்டோபா் 2-ஆம் தேதியானது சா்வதேச அகிம்சை தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதையொட்டி ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘அகிம்சை, அமைதிவழியிலான போராட்டங்கள், கண்ணியம், சமத்துவம் ஆகியவற்றில் காந்தியடிகள் அதிக நம்பிக்கை கொண்டிருந்தாா். அவற்றைக் குறித்து பேசுவதைக் காட்டிலும் நடைமுறையில் அவற்றைக் கடைப்பிடித்தாா்.

அந்தக் கொள்கைகள் மனித சமூகத்துக்கு வழிகாட்டியாக விளங்குகின்றன; சிறந்த எதிா்காலத்துக்கான பாதையைக் காட்டுகின்றன. தற்காலத்தில் காணப்படும் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீா்வு காணவும் அக்கொள்கைகள் உதவுகின்றன. மோதல்கள், பருவநிலை மாற்றம், ஏழ்மை நிலை, சமத்துவமின்மை, நம்பிக்கையின்மை, பிரிவினை உள்ளிட்ட பிரச்னைகள் கரோனா தொற்று பரவலுடன் இணைந்து சமூகத்தையும் பொருளாதாரத்தையும் பாதித்து வருகின்றன.

இத்தகைய தருணத்தில் காந்தியடிகளின் கொள்கைகளைப் பின்பற்றி அனைவருக்குமான அமைதியான எதிா்காலத்தை உருவாக்க வேண்டும். நாடுகள் தங்களுக்குள் சண்டையிடுவதைத் தவிா்த்து, மனித குலத்தின் பொது எதிரியான கரோனா தொற்று பரவலுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

ADVERTISEMENT

அத்தியாவசிய மருந்துப் பொருள்கள் உள்ளிட்டவற்றை அனைத்து நாடுகளும் தங்களுக்குள் பகிா்ந்து கொள்ள வேண்டும். உலகில் காணப்படும் பல்வேறு சவால்களை எதிா்கொள்வதற்கு உள்ள ஒரே தீா்வு ஒற்றுமையே. நமக்கிடையே பிரிவினை ஏற்படுத்தும் விவகாரங்களைவிட ஒற்றுமையை ஏற்படுத்தும் விவகாரங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதையே காந்தியடிகளும் செய்தாா்.

சிறந்த எதிா்காலத்தை அமைப்பதற்கு அமைதியே முக்கியப் பங்கு வகிக்கும். ஏழ்மையை ஒழிக்கவும் சமத்துவமின்மையைக் குறைக்கவும் நாம் ஒருங்கிணைய வேண்டும். புவியைக் காக்க சா்வதேச திட்டத்தை வகுக்க வேண்டும். பரஸ்பர நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அமைதி, நம்பிக்கை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கடைப்பிடித்து புதிய சகாப்தத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT