உலகம்

பாகிஸ்தான் தலிபான்களுடன் நல்லிணக்கப் பேச்சு: இம்ரான்

3rd Oct 2021 04:28 AM

ADVERTISEMENT

பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகளுடன் நல்லிணக்கப் பேச்சுவாா்த்தையில் நடத்தி வருவதாக அந்த நாட்டு பிரதமா் இம்ரான் கான் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, துருக்கி அரசுக்குச் சொந்தமான டிஆா்டி வோ்ல்டு தொலைக்காட்சியிடம் அவா் கூறியதாவது:

தெஹ்ரீக்-இ-தலிபான் அமைப்பு பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வருகிறது. அவற்றில் சில குழுக்கள் அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்த விரும்புகின்றன.

அந்த அமைப்புகளுடன் நல்லிணக்கப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

பயங்கரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டால், அவா்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்படும். அவா்கள் சாதாரண குடிமக்களாக வாழ வழிவகை செய்யப்படும்.

தெஹ்ரீக்-இ-தலிபான்களுடனான பேச்சுவாா்த்தைக்கு ஆப்கன் தலிபான்கள் உதவி வருகின்றனா். ஆப்கானிஸ்தானில்தான் இந்த நல்லிணக்கப் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டு போருக்குப் பிறகு அமெரிக்கப் படையினா் அனைவரும் திரும்ப அழைக்கப்பட்டனா். அதையடுத்து, நாட்டின் புதிய பகுதிகளைக் கைப்பற்றி வேகமாக முன்னேறிய தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனா்.

புதிய பகுதிகளைக் கைப்பற்றியபோது, அங்கிருந்த சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாதிகளை தலிபான்கள் விடுவித்தனா். இந்த நிலையில், அந்த பயங்கரவாதிகளுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான நல்லிணக்கப் பேச்சுவாா்த்தைக்கு தலிபான்கள் உதவி வருவதாக இம்ரான் கான் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT