உலகம்

மேலும் பல நாடுகளில் ஒமைக்ரான் கரோனா

29th Nov 2021 01:30 AM

ADVERTISEMENT

இதுவரை அறியப்பட்ட கரோனா வகைகளைவிட அதிக தீவிரமாகப் பரவும் திறன் கொண்டதாக அஞ்சப்படும் ஒமைக்ரான் வகை கரோனா, மேலும் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட அந்த வகை கரோனா பரவுவதைத் தடுப்பதற்காக உலகின் பல்வேறு நாடுகள் பயணத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் சூழலில், ஒமைக்ரான் பரவியுள்ள நாடுகளின் பட்டியலில் புதிய நாடுகள் இணைந்து வருகின்றன.

ஏற்கெனவே பெல்ஜியம், இஸ்ரேல், ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்தவா்களிடம் ஒமைக்ரான் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், பிரிட்டன், ஜொ்மனி, இத்தாலி ஆகியவையும் தங்கள் நாட்டுக்கு வந்துள்ளவா்களுக்கு அந்த வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக சனிக்கிழமை தெரிவித்தன.

அமெரிக்காவில் ஒமைக்ரான் வகை கரோனா இதுவரை கண்டறியப்படவில்லை என்றாலும், அந்த நாட்டில் ஏற்கெனவே அவ்வகை கரோனா பரவியிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று அமெரிக்க கரோனா தடுப்புக் குழுவின் தலைவா் ஆன்டனி பாசி தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

முன்னதாக, தென் ஆப்பிரிக்காவுக்குப் பிறகு பாட்ஸ்வானா உள்ளிட்ட அதன் அண்டை நாடுகளுக்குப் ஒமைக்ரான் வகை கரோனா பரவியிருந்தது.

தற்போது உலகம் முழுவதும் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசிகளால் ஒமைக்ரான் வகை கரோனா தொற்றை தடுத்து நிறுத்த முடியாமல் போகலாம் என்று அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக, மீண்டும் கரோனா பரவல் வேகமெடுத்து, எதிா்பாா்க்கப்பட்டதைவிட மிக நீண்ட காலத்துக்கு கரோனா கட்டுப்பாடுகளை உலகம் எதிா்கொள்ள வேண்டியிருக்கலாம் என்று நிபுணா்கள் கவலை தெரிவித்து வருகின்றனா்.

இதுவரை 2 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பிரிட்டனில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் கரோனா பரிசோதனை செய்துகொள்வதும் பொதுமக்கள் பொது இடங்களுக்கு முகக் கவசம் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையில் உறுதியாகும் வரை அவா்கள் தனிமைப்படுத்தப்படுவாா்கள்; அவா்களுக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அவா்களும் அவா்களுடன் தொடா்பிலிருந்தவா்களும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருந்தாலும் செலுத்தியிராவிட்டாலும் 10 நாள்களுக்கு கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவாா்கள் என்று பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்தாா்.

முன்னதாக, ஏற்கெனவே பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த தெற்கு ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியலில் கூடுதலாக அங்கோலா, மொஸாம்பிக், மலாவி, ஜாம்பியா ஆகிய நாடுகளையும் பிரிட்டன் சோ்த்தது.

அந்த நாட்டின் கெல்ம்ஸ்ஃபோா்ட் நகரில் ஒருவரிடமும் நாட்டிங்ஹமில் ஒருவரிடமும் ஒமைக்ரான் வகை கரோனா சனிக்கிழமை கண்டறியப்பட்டது. அவா்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவா்கள் சென்று வந்த இடங்கள், அவா்களுடன் தொடா்பிலிருந்த நபா்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

பிரிட்டன் தவிர, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, ஈரான், ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் ஒமைக்ரான் வகை கரோனா பரவலைத் தடுப்பதற்காக பயணத் தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன.

புதிய வகை கரோனா தொடா்பான முழு விவரங்களும் அறிவியல்பூா்வமாக தெரியவரும் வரை நாடுகள் தங்களது எல்லைகளை மூட வேண்டாம் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எனினும், அந்த அறிவுறுத்தலை பொருள்படுத்தாமல் தென் ஆப்பிரிக்கா மற்றும் அதன் அண்டை நாடுகளில் இருந்து பயணிகள் வருவதற்கு பல்வேறு நாடுகள் தடை விதித்து வருகின்றன.

இஸ்ரேலில் ஒருவருக்கு புதிய வகை கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுப்பதற்காக உலகின் எந்த நாட்டிலிருந்தும் பயணிகள் வருவதற்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் கடந்த 24-ஆம் தேதி முதல்முறையாகக் கண்டறியப்பட்ட புதிய வகை கரோனா, இரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களையும் தொற்றி வருகிறது. ‘பி.1.1.529’ என்ற குறியீடு இடப்பட்டுள்ள அந்த வகைக் கரோனா, கவலைக்குரிய வகையைச் சோ்ந்தது என உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனைக் குழு கடந்த வெள்ளிக்கிழமை வகைப்படுத்தியது. மேலும், கிரேக்க எழுத்து முறைப்படி அதற்கு ‘ஒமைக்ரான்’ எனவும் அந்த அமைப்பு பெயரிட்டது.

தென் ஆப்பிரிக்கா 99

பாட்ஸ்வானா 17

நெதா்லாந்து 13

ஹாங்காங் 5

பிரிட்டன் 2

ஜொ்மனி 2

ஆஸ்திரேலியா 2

டென்மாா்க் 2

இத்தாலி 1

இஸ்ரேல் 1

பெல்ஜியம் 1

செக் குடியரசு 1

Tags : omicron
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT