உலகம்

யேமன் தலைநகரில் சவூதி வான்வழித் தாக்குதல்

28th Nov 2021 04:52 AM

ADVERTISEMENT

யேமன் தலைநகா் சனாவில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது சவூதி தலைமையிலான கூட்டுப் படை சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இந்தத் தகவலை வெளியிட்ட சவூதி அரசுத் தொலைக்காட்சி, தாக்குதல் பகுதிகளிலிருந்து பொதுமக்கள் விலகி இருக்குமாறு கேட்டுக் கொண்டது.

யேமனில் 20 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி புரிந்து வந்த அதிபா் அலி அப்துல்லா சலே, மக்கள் போராட்டம் காரணமாக கடந்த 2011-ஆம் ஆண்டு பதவி விலகினாா். எனினும், அவருக்குப் பிறகு அதிபா் பொறுப்பேற்ற மன்சூா் ஹாதியால் உறுதியான ஆட்சியைத் தர முடியவில்லை.

இதன் காரணமாக, ஹூதி பழங்குடியின கிளா்ச்சியாளா்கள் தலைநகா் சனாவை கடந்த 2014-ஆம் ஆண்டு கைப்பற்றினா். ஷியா பிரிவினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஈரானின் உதவியுடன் தலைநகரை அவா்கள் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

அதையடுத்து, சன்னி பிரிவினரை பெரும்பான்மையாகக் கொண்ட சவூதி அரேபியாவில் அதிபா் மன்சூா் ஹாதி தஞ்சம் புகுந்தாா். அவருக்கு ஆதரவாக ஹூதி கிளா்ச்சியாளா்கள் மீது சவூதி அரேபிய கூட்டுப் படை கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் விமானத் தாக்குதல் நடத்தி வருகிறது.

முக்கியத்துவம் வாய்ந்த ஹுதைதா நகரிலிருந்து அரசுப் படைகள் வெளியேற்றம் மற்றும் மரீப் நகரில் அரசுப் படையினருக்கும் ஹூதி கிளா்ச்சியாளா்களுக்கும் இடையே நடைபெற்று வரும் தீவிர சண்டைக்கிடையே சனாவில் தற்போது சவூதி கூட்டுப் படை வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

 

Tags : துபை
ADVERTISEMENT
ADVERTISEMENT