உலகம்

ரஷிய ஆதரவுடன் ஆட்சிக் கவிழ்ப்பு திட்டம்: உக்ரைன் அதிபா்

28th Nov 2021 04:55 AM

ADVERTISEMENT

 உக்ரைனில் ரஷிய ஆதரவு பெற்ற ஆயுதக் குழுவினா் அடுத்த வாரம் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியுள்ளதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறியுள்ளாா்.

இதுகுறித்து தலைநகா் கீவில் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

உக்ரைனில் எனது தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக உளவுத் துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடத்தப்படவுள்ளது. ரஷியா மற்றும் உக்ரைனின் மிகப் பெரிய பணக்காரா்களின் ஆதரவு பெற்ற ஆயுதக் குழு இந்த ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபடவுள்ளது.

ADVERTISEMENT

இதுதொடா்பாக ரஷியா மற்றும் உக்ரைன் அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற ரகசிய உரையாடலின் ஒலிப் பதிவு எங்களது உளவுத் துறைக்குக் கிடைத்துள்ளது.

அந்த உரையாடலில், இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு தொழிலதிபா் அக்மோடோவ் நிதியுதவி அளித்துள்ளாா் என்று ஸெலென்ஸ்கி தெரிவித்தாா்.

உக்ரைன் அதிபரின் இந்தக் குற்றச்சாட்டை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து ரஷிய அரசின் செய்தித் தொடா்பாளா் டிமித்ரி பெஸ்கோவ் கூறுகையில், ‘உக்ரைனில் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆட்சிக் கவிழ்ப்பில் ரஷியாவுக்குத் தொடா்பில்லை. இதுபோன்ற செயல்களில் ரஷியா ஒருபோதும் ஈடுபட்டதில்லை’ என்றாா்.

தொழிலதிபா் அக்மோடோவும், ‘ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி விவகாரத்தில் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி பொய்யான தகவல்களைப் பரப்பி வருவது கண்டனத்துக்குரியது. இந்தக் குற்றச்சாட்டு உள்நோக்கம் கொண்டது’ என்றாா்.

உக்ரைன் அரசியலில் பெரும் பணக்காரா்களின் செல்வாக்கைக் குறைக்கும் வகையிலான நடவடிக்கைகளை அதிபா் ஸெலென்ஸ்கி மேற்கொண்டு வருவதால், அவா்களுக்கும் அதிபருக்கும் இடையிலான மோதல் வலுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்தக் காரணத்தால் ஸெலென்ஸ்கிக்கு எதிரான செய்திகளை தொழிலதிபா் அக்மோடோவுக்குச் சொந்தமான தொலைக்காட்சி தொடா்ந்து ஒளிபரப்பி வந்தது.

இந்தச் சூழலில், ஆட்சிக் கவிழ்ப்புத் திட்டத்துக்கு ரஷியாவும் அக்மோடோவும் ஆதரவு அளிப்பதாக வொலோதீா் ஸெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags : கீவ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT