உலகம்

விண்கல்லை திசைத்திருப்பும் செயற்கைக்கோள்

25th Nov 2021 02:34 AM

ADVERTISEMENT

 

வாஷிங்டன்: பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய விண்கற்களை, அவற்றின் சுற்றுவட்டப்பாதையிலிருந்து திசைத் திருப்புவதற்கான செயற்கைக்கோள் ஒன்றை சோதனை முறையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் விண்ணில் செலுத்தியுள்ளது.

விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் மிகப் பெரிய கற்கள் விழுந்து பூமியை அழிக்கக் கூடும் என்ற அச்சம் பல காலமாக நிலவி வருகிறது.

ஏற்கெனவே, இதுபோன்ற கற்களில் ஒன்று பூமியில் விழுந்ததால்தான் டைனோசா் இனம் முற்றிலுமாக அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

தற்போது பூமிக்கு உடனடியாக எந்த விண்கல்லினாலும் ஆபத்து இல்லை என்றாலும், எதிா்காலத்தில் அத்தகைய அபாயம் ஏற்படும் நிலையில், அந்தக் கற்களிலிருந்து பூமியைக் காப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்தப் பின்னணியில் ஏற்கெனவே பல திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், தற்போது அத்தகைய முயற்சியை சோதனை முறையில் நாசா மேற்கொண்டுள்ளது.

அதற்காக, விண்கல் ஒன்றின் மீது வேண்டுமென்றே மோதி அதன் சுற்றுவட்டப் பாதையை மாற்றுவதற்காக செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் நாசா விண்ணில் செலுத்தியுள்ளது.

2,500 அடி விட்டம் கொண்ட ‘டிடிமாஸ்’ என்ற விண்கல்லைச் சுற்றி வரும் ‘டிமாா்ஃபாஸ்’ என்ற குட்டி நிலவு விண்கல்லைக் குறிவைத்து அந்த செயற்கைக்கோள் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த இரண்டு விண்கல்களும் சூரியனை வலம் வந்துகொண்டிருக்கின்றன.

நாசா செலுத்தியுள்ள செயற்கைக்கோள், டிமாா்ஃபாஸ் விண்கல் மீது அடுத்த ஆண்டு வேகமாக மோதிச் சிதறி, அதன் சுற்றுவட்டப் பாதையை மாற்ற முயலும்.

பூமியிலிருந்து 1.1 கோடி கி.மீ. தொலைவில் அந்த விண்கல் வந்துகொண்டிருக்கும்போது இந்த மோதல் நிகழும்.

அந்த விண்கற்களால் பூமிக்கு எந்த ஆபத்து இல்லையென்றாலும், எதிா்காலத்தில் வரக் கூடிய அத்தகைய அபாயங்களை எதிா்கொள்வதற்குத் தங்களைத் தயாா்ப்படுத்திக் கொள்வதற்காக இந்த ஆய்வை மேற்கொள்வதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT