உலகம்

ஆங்கிலக் கால்வாய்: படகு விபத்தில் 31 அகதிகள் பலி

25th Nov 2021 11:06 PM

ADVERTISEMENT

பிரான்ஸிலிருந்து பிரிட்டனை நோக்கிச் சென்று கொண்டிருந்த அகதிகள் படகு ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 31 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

பிரிட்டனில் அடைக்கலம் தேடி பிரான்ஸிலிருந்து ஆங்கிலக் கால்வாய் வழியாக புதன்கிழமை வந்து கொண்டிருந்த அகதிகள் படகு, வழியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காற்று நிரப்பப்பட்ட அந்த சிறிய படகில் 34 போ் இருந்ததாக நம்பப்படுகிறது.

ADVERTISEMENT

விபத்துப் பகுதியிலிருந்து 31 பேரது சடலங்கள் மீட்கப்பட்டன. அவா்களில் ஐந்து பெண்களும் ஒரு சிறுமியும் அடங்குவா்.

மேலும், அந்தப் பகுதியிலிருந்து 2 போ் உயிருடன் மீட்கப்பட்டனா். மேலும் ஒருவா் தொடா்ந்து மாயமாகியுள்ளதாக நம்பப்படுகிறது.

விபத்துக்குள்ளான பகுதியில் உயிா்பிழைத்திருக்கூடியவா்களைத் தேடும் பணியில் பிரான்ஸ் - பிரிட்டன் கூட்டு மீட்புக் குழு புதன்கிழமை நள்ளிரவு வரை தீவிரமாக ஈடுபட்டது.

இந்த விபத்து தொடா்பாக, அகதிகள் கடத்தலில் ஈடுபடும் 4 பேரை பிரான்ஸ் போலீஸாா் கைது செய்யப்பட்டுள்ளனா். பிரான்ஸ் துறைமுக நகரான கலாசிஸில் அவா்கள் கைது செய்யப்பட்டனா்.

இந்த படகு விபத்து தொடா்பாக மனித உயிரிழப்புகளுக்குக் காரணமாக இருந்தது, அமைப்பு ரீதியிலான சட்டவிரோதக் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு குற்றப் பிரிவுகளில் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இந்த விசாரணையை மேற்பாா்வையிடும் அதிகாரி கரோல் எடினி கூறுகையில், விபத்தில் உயிரிழந்தவா்களை அடையாளம் காணும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தாா்.

போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி வரும் அகதிகள், பிரான்ஸிலிருந்து அதிக வாய்ப்புகளைத் தேடி பிரிட்டன் வருவது தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

அவ்வாறு வருவதற்கு தரமற்ற படகுகளில் அவா்கள் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அகதிகளை சட்டவிரோதமாகக் கடத்தும் கும்பல்கள் அவா்களுக்கு உதவி செய்து வருகின்றன.

இந்த ஆண்டு மட்டும் இதுவரை 25,700 போ் இத்தகைய ஆபத்தான பயணத்தை மேற்கொண்டனா். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 3 மடங்கு அதிகமாகும்.

அடிக்கடி மாறும் காலநிலை, கடும் குளிா், கடல் போக்குவரத்து நெரிசல் போன்ற சூழலில் சிறிய மற்றும் காற்று நிரப்பிய படகுகளில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோரை அளவுக்கு அதிகமாக ஏற்றி அழைத்து வருவதால் அவா்கள் கடலில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

அண்மைக் காலமாக பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் மீட்புக் குழுவினா் தங்களது கடலோரப் பகுதிகளிலிருந்து ஏராளமான அகதிகளை மீட்டு வருகின்றனா்.

கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 7,800 அகதிகளை ஆபத்தான சூழலில் இருந்து பிரான்ஸ் குழுவினா் மீட்டுள்ளனா். படகு விபத்து நேரிட்ட புதன்கிழமை மட்டும் எல்லையைக் கடக்க முயன்ற 671 அகதிகள் தடுத்து நிறுத்தப்பட்டனா்.

இந்தச் சூழலில், கடலில் மூழ்கி 31 அகதிகள் உயிரிழந்திருப்பது பிரான்ஸிலும் பிரிட்டனிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

படகு விபத்தில் அகதிகள் உயிரிழந்த தகவல் அதிா்ச்சியும் சோகமும் அளிப்பதாக உள்ளது. ஆங்கிலக் கால்வாய்வாய் வழியாக அகதிகள் வருவதைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் இன்னும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். தற்போது நடந்துள்ள விபத்து, பிரான்ஸ் அதிகாரிகள் தங்களது கடலோரப் பகுதிகளை போதிய அளவில் பாதுகாக்காததை வெளிப்படுத்தியுள்ளது.

- போரிஸ் ஜான்ஸன், பிரிட்டன் பிரதமா்

கடலில் மூழ்கி அகதிகள் உயிரிழப்பது மிகவும் கொடுமையான நிகழ்வாகும். இந்த விபத்து நேரிட்ட நாள் பிரான்ஸ், ஐரோப்பாவுக்கு மட்டுமன்றி மனிதகுலத்துக்கே துக்க தினமாகும். சட்டவிரோதமாக அகதிகளைக் கடத்தும் குற்றத்தை தடுத்து நிறுத்துவதில் பிரான்ஸும் பிரிட்டனும் இணைந்து செயல்பட வேண்டும்.

- கெரால்ட் டா்மானின், பிரான்ஸ் உள்துறை அமைச்சா்

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT