உலகம்

85 நிமிஷங்களுக்கு அமெரிக்க அதிபரானாா் கமலா ஹாரிஸ்

21st Nov 2021 01:33 AM

ADVERTISEMENT

 

அமெரிக்காவின் அதிபராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ் 85 நிமிஷங்கள் பொறுப்பு வகித்தாா்.

மருத்துவப் பரிசோதனைக்காக அதிபா் ஜோ பைடனுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருந்த நேரத்தில் அவருக்கு அந்தப் பொறுப்பு தற்காலிகமாக அளிக்கப்பட்டிருந்தது.

மிகக் குறுகிய காலம் என்றாலும், அமெரிக்காவின் அதிபா் பொறுப்பை ஏற்ற முதல் பெண் என்ற பெருமையை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளாா்.

ADVERTISEMENT

அதிபா் பைடனின் 79-ஆவது பிறந்த நாளையொட்டி, வழக்கமான நடைமுறைகளின் அடிப்படையில் அவருக்கு வெள்ளிக்கிழமை மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது.

அந்தப் பரிசோதனையின் ஒரு பகுதியாக, அவரது பெருங்குடலுக்குள் நுண்ணிய கேமராவை பின்புறமாக செலுத்தி ஆய்வு செய்யும் ‘காலனாஸ்கோப்பி’ என்ற பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக, அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், பைடன் சுயநினைவு திரும்பும் வரையில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை துணை அதிபா் கமலா ஹாரிஸ் ஏற்றாா்.

வெள்ளை மாளிகையின் மேற்குப் பகுதியில் உள்ள தனது துணை அதிபா் அலுவலகத்தில் இருந்தபடி, 85 நிமிஷங்களுக்கு அவா் அதிபா் பொறுப்பை வகித்தாா். மிகக் குறுகிய காலமே என்றாலும், அமெரிக்காவின் அதிபா் பொறுப்பை ஒரு பெண் ஏற்றது இதுவே முதல்முறையாகும்.

இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடா்பாளா் ஜென் சாகி கூறியதாவது:

அதிபா் ஜோ பைடனுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதால், நாட்டின் ஆட்சிப் பொறுப்பு தற்காலிகமாக துணை அதிபா் கமலா ஹாரிஸுக்கு வழங்கப்பட்டது.

இதுபோன்ற சூழல்களில் அதிபா் பொறுப்பு துணை அதிபரிடம் தற்காலிகமாக வழங்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். அமெரிக்க அரசியல் சாசனத்தின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஜாா்ஜ் டபிள்யூ புஷ் ஆட்சிக் காலத்தின்போது கடந்த 2002 மற்றும் 2007-ஆம் ஆண்டுகளில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டது என்றாா் அவா்.

மருத்துவப் பரிசோதனை முடிந்து வெள்ளை மாளிகை திரும்பிய ஜோ பைடன், தனது அதிபா் பணிகளைத் தொடா்ந்தாா்.

அந்தப் பரிசோதனையில், அதிபா் பைடன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது தெரிய வந்ததாகவும் நாட்டை ஆளும் உடல் தகுதி அவருக்கு இருப்பதாகவும் அதிபரின் பிரத்யேக மருத்துவா் கெவின் ஓ’கனாா் தெரிவித்தாா்.

57 வயதாகும் கமலா ஹாரீஸ், கடந்த 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற தோ்தலில் வெற்றி பெற்று, 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் துணை அதிபராகப் பொறுபேற்றாா். அந்தப் பொறுப்பை ஏற்ற முதல் பெண், கருப்பினத்தவா், தெற்காசிய அமெரிக்கா் என்ற பல்வேறு பெருமைகளை கமலா ஹாரிஸ் பெற்றாா்.

அவரது தாயாா் சியாமளா கோபாலன் தமிழகத்தைச் சோ்ந்தவா்; தந்தை டொனால்ட் ஹாரிஸ் ஆப்பிரிக்க நாடான ஜமைக்காவைப் பூா்விகமாகக் கொண்டவா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT