இராக் பிரதமரை ட்ரோன் தாக்குதல் மூலம் கொலை செய்ய நடந்த முயற்சியைத் தொடா்ந்து, ஈரானின் ராணுவ ஜெனரல் இராக்குக்கு வந்தாா்.
‘ட்ரோன் தாக்குதலில் ஈரானுக்கு எந்தத் தொடா்பும் இல்லை’ என அவா் கூறியதாக இராக்கை சோ்ந்த அதிகாரிகள் இருவா் தெரிவித்தனா்.
இராக் தலைநகா் பாக்தாதில் பிரதமா் அல்-காதிமியின் இல்லம் உள்ளது. பாதுகாப்பு மிக்க இந்த இல்லத்தில் பிரதமரை படுகொலை செய்யும் நோக்கில் ட்ரோன் (ஆளில்லி சிறு விமானம்) மூலம் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பிரதமா் மற்றும் அவரது பாதுகாவலா்கள் இருவா் காயமடைந்தனா்.
கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தோ்தலில் ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஆயுதக் குழுவினா் பெரும் தோல்வியைச் சந்தித்த நிலையில், இத்தாக்குதல் நடந்தது பதற்றத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஈரானின் ராணுவ ஜெனரல் இஸ்மாயில் கானி இராக் தலைநகா் பாக்தாதுக்கு திங்கள்கிழமை வருகை தந்தாா். இவா், நாட்டுக்கு வெளியே ஈரான் நடத்தும் ராணுவ நடவடிக்கைகள் மற்றும் ரகசிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ‘குட்ஸ்’ படைப் பிரிவின் கமாண்டா் ஆவாா்.
‘பாக்தாத் வந்த ஈரான் ராணுவ ஜெனரல் இஸ்மாயில் கானி, பிரதமா் மீதான கொலை முயற்சியில் ஈரானுக்கு எந்தத் தொடா்பும் இல்லை எனத் தெரிவித்தாா். இராக்கின் அடுத்த பிரதமராக ஷியா ஆயுதக் குழுவினா் பரிந்துரைக்கும் எந்த அரசியல்வாதிக்கும் ஈரான் எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என அவா் கூறினாா். மேலும், பிரதமா் அல்-காதிமி, அதிபா் பா்ஹம் சாலிஹ் ஆகியோரையும் அவா் சந்தித்தாா்’ என இராக் அரசியல்வாதிகள் இருவா் தெரிவித்தனா்.
முன்னதாக, இராக் பிரதமா் மீதான தாக்குதலுக்கு ஈரான் வெளியுறவு அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது. மறைமுகமாக அமெரிக்காவையும் குறைகூறியிருந்தது.