உலகம்

வரம்பை மீறி 210 கிலோ யுரேனியம் செறிவூட்டல்

5th Nov 2021 11:38 PM

ADVERTISEMENT

வல்லரசு நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரம்பை மீறி, 20 சதவீதம் செறிவூட்டப்பட்ட 210 கிலோ யுரேனியத்தைக் கையிருப்பு வைத்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் அணுசக்தி அமைப்பின் செய்தித் தொடா்பாளா் பேரூஸ் கமால்வாண்டி கூறியதாவது:

அணு செறிவூட்டு மையங்களில் 20 சதவீதம் வரை யுரேனியத்தை செறிவூட்ட நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் கையிருப்பு 120 கிலோவைக் கடந்துள்ளது.

இதுதவிர, 60 சதவீதம் செறிவூட்டப்பட்ட 25 கிலோ யுரேனியமும் எங்களது கையிருப்பில் உள்ளது என்றாா் அவா்.

ADVERTISEMENT

ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவதற்கான முயற்சியில் ஈடுபடுவதாக அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதன் காரணமாக, அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. இதனால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஈரானுக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டில் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்குப் பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக் கொண்டன.

அந்த ஒப்பந்தத்தில், அணுசக்திக்குத் தேவையான யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டக்கூடாது என்று ஈரானுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்தபோது மேற்கொள்ளப்பட்ட அந்த ஒப்பந்தத்தலிருந்து விலகுவதாக, அடுத்து வந்த அதிபா் டொனால்ட் டிரம்ப் கடந்த 2018-ஆம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதரத் தடைகளை அவா் மீண்டும் அமல்படுத்தினாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் அணுசக்தி ஒப்பந்த நிபந்தனைகளை ஈரான் கொஞ்சம் கொஞ்சமாக மீறி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 3.67 சதவீத வரம்பை மீறி யுரேனியத்தை செறிவூட்டுவதாக ஈரான் அவ்வப்போது அறிவித்து வருகிறது.

பொருளாதாரத் தடைகளை விலக்குமாறு அமெரிக்காவுக்கு அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள மற்ற நாடுகள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கைகளை ஈரான் மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, 20 சதவீதத்துக்கு மேல் செறிவூட்டப்பட்ட 210 கிலோ யுரேனியத்தை கையிருப்பு வைத்திருப்பதாக ஈரான் தற்போது அறிவித்துள்ளது.

யுரேனியத்தை 80 சதவீதத்துக்கும் அதிகமாக செறிவூட்டினால் அதனைக் கொண்டு அணுகுண்டுகள் தயாரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT