அமெரிக்காவின் ரிட்ஜ்பேக் பயோதெரபாட்டிக்ஸ் மற்றும் மொ்க் ஷாா்ப் நிறுவனங்கள் கூட்டாக உருவாக்கியுள்ள மோல்னுபிரவிா் என்ற கரோனா சிகிச்சை மாத்திரையை நோயாளிகளுக்கு அளிக்க பிரிட்டன் அனுமதி வழங்கியுள்ளது.
கரோனா சிகிச்சை மாத்திரைக்கு ஒரு நாடு அங்கீகாரம் அளிப்பது இதுவே முதல்முறையாகும்.
இதுகுறித்து பிரிட்டன் சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவிது கூறுகையில், ‘கரோனாவை குணப்படுத்துவதற்கான சிகிச்சையில் மோல்னுபிரவிா் மாத்திரையைப் பயன்படுத்துவதற்கு மருந்துகள் ஒழுங்காற்று அமைப்பு (எம்ஹெச்ஆா்ஏ) அனுமதி அளித்துள்ளது. கரோனா மருந்துக்கு அங்கீகாரம் அளிக்கப்படுவது உலகில் இதுவே முதல்முறையாகும். இந்த நடவடிக்கை, கரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும்’ என்றாா்.
கரோனாவால் உயிரிழப்பு அபாயம் அதிகம் நிறைந்த வயோதிகா்கள் மற்றும் உடல் பருமன், சா்க்கரை நோய், இருதய நோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவா்களுக்கு மோல்னுபிரவிா் மாத்திரையை அளிக்க எம்ஹெச்ஆா்ஏ அனுமதி அளித்துள்ளது.