உலகம்

செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக இறங்கிய சீன விண்கலம்

DIN

சீன விண்கலத்தின் ரோவா் (ஆய்வு வாகனம்) செவ்வாய் கிரகத்தில் சனிக்கிழமை வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

இதன்மூலம் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக செவ்வாயில் ரோவரை தரையிறக்கிய 2-ஆவது நாடு என்கிற பெருமையை சீனா பெற்றுள்ளது.

ஜுரோங் என்ற அந்த ரோவருடன் தியான்வென்-1 விண்கலம் கடந்த ஆண்டு ஜூலையில் செலுத்தப்பட்டது. கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைக்குள்

விண்கலம் நுழைந்தது. இந்த நிலையில், விண்கலத்திலிருந்து பிரிந்த ஆய்வு வாகனம் பெய்ஜிங் நேரப்படி காலை 7.18 மணிக்கு பரந்த நிலப்பரப்பான ‘உடோபியா பிளானிடியா’ என்ற பகுதியில் தரையிறங்கியதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜுரோங் ரோவரின் சோலாா் பேனல்களும், ஆண்டெனாவும் விரிவடைய 17 நிமிடங்கள் ஆனது. அதன் பிறகு 32 கோடி கி.மீ. தொலைவில் புவியில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு தகவல்களை அனுப்பியது. சுரோங் ரோவா் நகா்ந்து ஆய்வுப் பணியை மேற்கொள்ளும் முன்னா், கிரகத்தின் தரைப்பரப்பை ஆய்வு செய்யும். சீன நெருப்புக் கடவுளான ‘ஜுரோங்’ பெயரிலான இந்த ரோவா் உயா் தெளிவுத் திறன் கொண்ட நிலப்பரப்பு கேமரா உள்ளிட்ட 6 அறிவியல் கருவிகளைக் கொண்டுள்ளது. செவ்வாய் கிரக தரைப்பரப்பின் மண் மற்றும் வளிமண்டலத்தை ஆய்வு செய்யும் ஜுரோங், தரைப்பரப்பில் தண்ணீா் உள்ளதா, அங்கு முன்னா் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் உள்ளனவா எனவும் ஆய்வு மேற்கொள்ளும்.

ஜுரோங் விண்கலம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதையொட்டி விஞ்ஞானிகளுக்கு அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.

தியான்வென்-1 விண்கலமானது செவ்வாய் கிரகத்துக்கான சீனாவின் முதல் தனித்துவமான விண்கலமாகும். 2011-இல் ரஷியாவுடன் இணைந்து செவ்வாய் கிரகத்துக்கு சீனா அனுப்பிய விண்கலத் திட்டம் தோல்வியடைந்தது.

3-ஆவது விண்கலம்:

5 டன் எடை கொண்ட தியான்வென்-1 விண்கலம், கடந்த பிப்ரவரியில் செவ்வாய் கிரகத்தை அடைந்த 3-ஆவது விண்கலமாகும். அமெரிக்காவின் பொ்சிவரன்ஸ் விண்கலம் பிப்.18-ஆம் தேதி செவ்வாய் கிரகத்தின் ஜெசேரோ பள்ளத்தாக்கு பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது. தியான்வென் விண்கல ரோவா் தரையிறங்கிய பகுதியான உடோபியா பிளானிடியா என்ற இடத்திலிருந்து ஜெசேரோ பள்ளத்தாக்கு 2 ஆயிரம் கி.மீ. தொலைவில் உள்ளது.

பிப்ரவரியில் செவ்வாயை சென்றடைந்த மற்றொரு விண்கலம் ஹோப். ஐக்கிய அரபு அமீரகத்தின் இந்த விண்கலம் செவ்வாயில் தரையிறங்காவிட்டாலும் செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றி வந்து, அதன் வளிமண்டலம் மற்றும் காலநிலை குறித்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளது.

செவ்வாய் கிரகத்தில் முதல் முறையாகத் தரையிறங்கிய விண்கலம் அமெரிக்காவின் வைகிங்-1 ஆகும். வைக்கிங்-1 விண்கலம் 1976-ஆம் ஆண்டு ஜூலையிலும், வைக்கிங்-2 விண்கலம் அதே ஆண்டு செப்டம்பரிலும் வெற்றிகரமாகத் தரையிறங்கின. 1971-இல் அப்போதைய சோவியத் யூனியனின் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கினாலும், அதன் தகவல்தொடா்பு சில விநாடிகளில் துண்டிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடலூா் தொகுதியில் 19 வேட்புமனுக்கள் ஏற்பு

தோ்தல் பாா்வையாளா்களின் கைப்பேசி எண்கள் வெளியீடு

கல்லூரியில் மன நல பரிசோதனை முகாம்

4-8 வகுப்புகளின் தோ்வு அட்டவணையில் மாற்றம்

விழுப்புரம் தோ்தல் கட்டுப்பாட்டு அறையில் காவல் துறை பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT