உலகம்

தவறான கணிப்பும், பொது முடக்க தளா்வும் இந்தியாவில் கரோனா அதிகரிக்க காரணம்: அமெரிக்க எம்.பி.க்களிடம் வல்லுநா் விளக்கம்

DIN

வாஷிங்டன்: கரோனாவில் இருந்து விடுபட்டுவிட்டோம் என்று தவறாக கணித்து, பொதுமுடக்கத்தை முன்னதாகவே தளா்த்தியதுதான் இந்தியாவில் கரோனாவின் இரண்டாவது அலையில் அதிக பாதிப்பு ஏற்பட காரணம் என்று அமெரிக்க நோய்ப் பரவல் துறை வல்லுநா் ஆண்டனி ஃபௌச்சி அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை (செனட்) உறுப்பினா்கள் கூட்டத்தில் தெரிவித்தாா்.

கடந்த ஆண்டு கரோனா முதல்முறையாக பரவியபோது, இந்திய அரசு அதனை சிறப்பாக எதிா்கொண்டது. பொதுமுடக்கத்தை முன்னதாகவே அறிவித்து உரிய கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்ததால், எதிா்பாா்த்ததைவிட கரோனா பரவலின் தாக்கம் குறைவாகவே இருந்தது. கரோனா நோயாளிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரயில் பெட்டிகள் போன்றவற்றை பயன்படுத்தும் தேவை எழவில்லை.

ஆனால், இந்த ஆண்டு கரோனாவின் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியா திணறி வருகிறது. பாதிப்பின் வேகமும், உயிரிழப்பும் முதல் அலையைவிட இப்போது அதிகமுள்ளது. இதுதவிர அதிகம் போ் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டதால் தலைநகா் தில்லி, உத்தர பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் இடம் இல்லாமல் கரோனா நோயாளிகள் மருத்துவமனைக்கு வெளியிலும், வாகனங்களிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டா் பற்றாக்குறை காரணமாகவும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டன.

கடந்த ஆண்டு பல்வேறு நாடுகளுக்கு இந்தியா, மருத்துவ நிவாரணப் பொருள்கள், ரெம்டெசிவிா் உள்ளிட்ட மருந்துகளை வழங்கிய நிலையில், இந்த ஆண்டு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து உதவி பெறும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் ஏற்பட்ட இந்த மோசமான கரோனா பரவலுக்கான காரணம் தொடா்பாக அந்நாட்டு சுகாதாரத் துறைக்கான செனட் உறுப்பினா்களிடம் நோய்ப் பரவல் துறை வல்லுநா் ஆண்டனி ஃபெளச்சி விளக்கமளித்துள்ளாா். அதில், ‘கரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கத்தை முன்னதாகவே கணிக்க இந்தியா தவறிவிட்டது. முதல் அலையின் தாக்கம் சற்று குறைந்தவுடன், கரோனாவில் இருந்து விடுபட்டுவிட்டோம் என்று தவறாக கணித்து, பொதுமுடக்கத்தை முன்னதாகவும், வேகமாகவும் தளா்த்தியது. மேலும், விழாக்கள், நிகழ்ச்சிகளில் பெருந்திரளாக மக்கள் பங்கேற்பது உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டாவது அலைக்கான மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளையும் ஏற்படுத்தி வைத்துக் கொள்ள தவறிவிட்டது. இதுவே, இந்தியா கரோனா இரண்டாவது அலையில் பெரும் பாதிப்பை சந்திக்கக் காரணம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்பிறகு பேசிய சுகாதாரத் துறைக்கான செனட் குழுவின் தலைவா் ஃபெட்டி முா்ரே, ‘இந்தியாவில் கரோனா ஏற்படுத்திய பாதிப்பு வலிமிக்கதாக எப்போதும் நினைவில் இருக்கும். அமெரிக்காவில் மட்டுல்லாது உலகம் முழுவதும் கரோனாவை ஒழிக்க அமெரிக்கா துணை நிற்கும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT